ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி உலக வானொலி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. வானொலி ஒலிபரப்பு சேவையை கொண்டாடுவதற்காகவும் உலக நாடுகளுக்கான ஒற்றுமையை ஊக்குவிக்கவும் இந்த உலக வானொலி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
உலகம் முழுவதிலும் இருக்கும் மக்களுக்கு குறைந்த செலவில் தகவலை அனுப்புவதற்கு வானொலி ஏதுவானதாக இருந்தது. பல வருடங்களுக்கு முன்பு தொழில்நுட்பம் வளர்ச்சி அடையாத சூழலில் ஒலி மூலமாக தகவல்களை பகிர வானொலி பெரிதும் உதவியது.
இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தியை கூட இந்தியர்கள் வானொலியில் தான் கேட்டு தெரிந்து கொண்டனர். தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன், லேப்டாப், டேப்லெட், இன்டர்நெட் என பலவற்றில் பொழுதை கழிக்க முடிகிறது. ஆனால் அன்றும் இன்றும் வானொலி மக்கள் மத்தியில் பிரபலமாக தான் இருக்கிறது.
ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களில் பலரும் வானொலி கேட்க தவறுவதில்லை. குறிப்பாக இரவு நேரங்களில் வானொலியில் இசையை ரசித்தவாறு தூங்குவதை சிலர் வாடிக்கையாக வைத்திருப்பார்கள் என்றும் கூறலாம். அந்த அளவிற்கு நம்மோடு ஒன்றிப்போன வானொலியை கொண்டாடும் தினமாகவும் இந்த உலக வானொலி தினம் பார்க்கப்படுகிறது.