நடிப்பதற்காகவே பிறந்து, தன்னுடைய நாடி நரம்பெல்லாம் சினிமா இரத்தம் ஊறி, தான் சம்பாதித்த பணத்தினை இன்றளவும் சினிமாவில் முதலீடு செய்து இன்றும் சினிமாவில் பெற்றும் இழந்தும் கொண்டிருக்கிறார் உலக நாயகன் கமல்ஹாசன்.
கமல் இப்போது உலக நாயகனாக இருந்தாலும் அவரை ஒரு முழு நடிகராக உருவாக்கிய பங்கு இயக்குனர் பாலச்சந்தரையே சாரும். கமல் தனது 5 வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து பார்த்தால் பசிதீரும், ஆனந்த ஜோதி என சில படங்களில் நடித்தார். அதன்பின் பாலகனாக பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தவர் டீன் ஏஜை எட்டியவுடன் தங்கப்பன் எனும் நடன இயக்குனரிடம் உதவியாளராக சேர்ந்து பல படங்களிலும் வேலை செய்தார்.
விஜய் படத்தில் வரும் ஹிட் பாட்டு இந்த பாட்டோட அப்டேட் வெர்ஷனா..? போட்டுடைத்த கவிஞர் யுகபாரதி
ஒருகட்டத்தில் நடன இயக்குனர் ஆவதா, நடிப்பதா, இயக்கம் பக்கம் செல்வதா என அவருக்கு ஒரே குழப்பமாக இருந்தது. அப்போது ஜெமினி கணேசன் பெரிய நடிகராக இருந்தார். பாலச்சந்தரின் இயக்கத்தில் தொடர்ந்து நடித்து வந்தார். அவருக்கு கமல் மீது அதிக அன்பும் உண்டு. ஒருமுறை, அவரை அழைத்துக் கொண்டு பாலச்சந்தரை பார்க்கப்போனார்.
அப்போது கமலை அறிமுகப்படுத்தி ‘இவன் நன்றாக நடிப்பான். மிகவும் திறமைசாலி. இவனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என சொன்னார். அப்போது கமலுக்கு டீன் ஏஜ். அவரை ஹீரோவாக நடிக்க வைக்க பாலச்சந்தர் விரும்பவில்லை என்றாலும் கமலின் முகம் அவருக்கு மனதில் பதிந்து போனது.
எனவே, தனது அரங்கேற்றம் உள்ளிட்ட சில படங்களில் கமலுக்கு சின்ன சின்ன வேடங்கள் கொடுத்தார். ஒருமுறை ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ என்கிற படத்தை இயக்க பாலச்சந்தர் முடிவெடுத்தார். அப்படத்தின் ஹீரோ சிவக்குமார். அதில், கமலுக்கு முக்கிய வேடம். ஆனால், அந்த வேடத்தில் அவரை போடக் கூடாது என படக்குழுவினர் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், பாலச்சந்தர் கமல்தான் அதில் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். பின்னர் கமலை அழைத்து ‘இந்த படத்தில் உன்னை நடிக்க வைக்க பல எதிர்ப்பு. ஆனாலும் உன்னை நம்பி நடிக்க வைக்கிறேன். இதில் உன்னை நிரூபித்து காட்ட வேண்டும்’ எனக் கூறினாராம். கமலும் தனது குரு கூறியதைக் கேட்டு நடிப்பில் அசத்தினாராம். அந்தப் படத்தில் கமலின் வித்தியாசமான நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. படம் வெளியாகி வெற்றி பெற்றவுடன் கமலை போட வேண்டாம் என சொன்னவர்கள் முகத்தில் அறைந்தாற் போல் வாயை மூடிக் கொண்டனர்.