தென்னிந்திய சினிமாவில் இப்போது நயன்தாராவை நாம் லேடி சூப்பர் ஸ்டார் என்று தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம். ஆனால் 90-களில் தென்னிந்திய சினிமாவையே ஆட்டிப்படைத்த நடிகை தான் விஜயசாந்தி. உண்மையாகவே லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு பொருத்தமானவர்.
அழகிலும், அதிரடியிலும் ரசிகர்களைக் கவர்ந்தவர். காதல் காட்சிகளில் கொஞ்சியும், சண்டைக் காட்சிகளில் அனல் பறக்க விட்டும், ஹீரோக்களை மிரட்டுவதில் தனி கெத்தும் கொண்டு சினிமாவில் அசைக்க முடியாத இரும்பு நடிகையாகத் திகழ்ந்தவர்.
ஆபாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் படத்தின் மூலம் அறிமுகமான விஜயசாந்தி ஆந்திராவைச் சேர்ந்தவர். இப்படத்திற்குப் பின்னர் ஆந்திரத் திரையுலகில் அசைக்க முடியாத ஹீரோயினாக வலம் வந்தார். இப்போது ஹீரோயின்களை மட்டும் வைத்து படம் இயக்கும் இயக்குநர்களுக்கு முன்னோடி இவர்தான். சோலோவாக சண்டைக் காட்சிகளில் நடித்து ஹீரோக்களையே மிஞ்சினார்.
ஒரு கட்டத்தில் இவரது ஆக்சன் காட்சிகளைப் பார்க்கவே திரையில் கூட்டம் அலைமோதியது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 185-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் விஜயசாந்தி. ரஜினியுடன் இவர் நெற்றிக்கண், மன்னன் ஆகிய படங்களில் நடித்தார். இதில் பி.வாசு இயக்கிய மன்னன் படம் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தது. 1991-இல் வெளியான கார்தவ்யம் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான இந்திய தேசிய திரைப்பட விருதினை வென்றார்.
கடந்த 1998-ம் ஆண்டு முதல் அரசியல் களத்தில் பணியாற்றி வருகிறார். ஆந்திராவைச் சேர்ந்த சீனிவாச ராவ் என்பவரை திருமணம் செய்து கொண்டு விஜயசாந்திக்கு குழந்தைகள் இல்லை. இதுபற்றி அவர் கூறும் போது, “எனக்கு குழந்தைகள் மிகவும் பிடிக்கும். ஆனால் குழந்தைகள் இருந்தால் சுயநலம் வந்துவிடும். சுயநலமிருந்தால் அரசியலில் பொது தொண்டு செய்ய முடியாது.
எனவே தான் என் கணவரிடம் குழந்தைகள் வேண்டாம் என்று கூறினேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டார். ஜெயலலிதாவும் குழந்தை, குடும்பம் இல்லாமல் சுயநலமின்றி மக்களுக்கு தொண்டு செய்தார். அவரைப் போல் அரசியலில் இருக்கவேண்டும் என்பதற்காகவே குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை.” என்றார் இந்த லேடி சூப்பர் ஸ்டார்.