தமிழ் சினிமாவில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இசை சாம்ராஜியம் நடத்தி வருபவர் தான் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான். 1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ ஆர் ரஹ்மான், தனது முதல் திரைப்படத்திலேயே தேசிய விருது வென்று, இந்திய சினிமா பிரபலங்கள் பலரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருந்தார்.
அதுவரை தமிழ் சினிமாவில் இளையராஜா என்ற பெயர் தான் இசையில் மிகவும் பிரபலமாக இருந்த சூழலில் அதில் தனது பெயரையும் இடம்பெறச் செய்த ரஹ்மான், அடுத்தடுத்து தொட்டதெல்லாம் பொக்கிஷ ஆல்பமாக மாறி இருந்தது. அப்படி அவர் போட்ட மெட்டுக்கள் பலவும் 90 ஸ் கிட்ஸ்கள் பலரும் ஒரு காலத்தில் முணுமுணுத்த பாடலாகவும் அமைந்திருந்தது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி சுமார் 32 ஆண்டுகள் ஆன போதிலும், இன்றும் ரஹ்மானின் பாடல்கள் இளம் இசை அமைப்பாளர்களுக்கும் சவால் விடும் வகையில் தான் அமைந்திருக்கிறது. டிரெண்டிற்கேற்ற வகையில், தொடர்ந்து தனது பாடலில் ஏதாவது ஒரு புதுமையை புகுத்திக் கொண்டே இருக்கும் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்த அயலான் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
அடுத்ததாக லால் சலாம் திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதியன்று வெளியாக உள்ளது. ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். இதன் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில், ரஹ்மானின் பாடல்கள் அனைவரையுமே மிகவும் வெகுவாக கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த நிலையில் லால் சலாம் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றிற்காக ரஹ்மான் செய்துள்ள புதுமை தற்போது அனைவரையுமே திரும்பி பார்க்க வைத்துள்ளது. தமிழ் சினிமாவில் மிக முக்கியமான பாடகராக ஒரு காலத்தில் இருந்தவர் தான் சாகுல் ஹமீது. இவர் ஏ. ஆர். ரஹ்மான் இசையிலும் பல பாடல்களை பாடி உள்ள நிலையில், கடந்த 27 ஆண்டுகளுக்கு முன் மறைந்தார்.
இவரை போல மற்றொரு பிரபல பாடகரான பாம்பே பாக்யாவும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக உடல் நலக்குறைவால் காலமானார். இப்படி மறைந்து போன சாகுல் ஹமீது மற்றும் பாம்பே பாக்யா ஆகியோரின் குரலை புதிய தொழில்நுட்பமான AI மூலம் பயன்படுத்தி லால் சலாம் திரைப்படத்தில் திமிறி எழுடா என்ற பாடலை பாட வைத்து புதிய ட்ரெண்ட் ஒன்றையும் தமிழ் சினிமாவில் உருவாக்கி முத்திரை பதித்துள்ளார் ஏ. ஆர். ரஹ்மான்.
இன்னும் தனது இசையால் பலரைக் கட்டிப் போட்டு வரும் ஏ. ஆர். ரஹ்மான், தற்போது AI மூலம் செய்துள்ள புரட்சியை நிச்சயம் பல இசையமைப்பாளர்கள் வருங்காலத்தில் பின்பற்றுவார்கள் என்றே தெரிகிறது.