2024-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் குடியரசு தினத்தினையொட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமா, கலை, சமூகம், மருத்துவம், அறிவியல், விவசாயம், சேவை, அர்ப்பணிப்பு, அரசியல், கல்வி, விளையாட்டு என ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கிய, விளங்குகின்ற இந்தியக் குடிமக்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதுதான் பத்ம விருதுகள். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு அடுத்தபடியாக பத்ம விருதுகள் இருக்கின்றன.
இவற்றில் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற மூன்று விருதுகள் அடக்கம். தற்போது 2024-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் நேற்று வெளியான நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் கேப்டன் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 132 பேருக்கு இந்த பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் தமிழகத்தை சேர்ந்தவர்களான பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா, கேப்டன் விஜயகாந்த், பத்மா சுப்ரமண்யம், பத்திரப்பன், ஜோஷ்னா சின்னப்பா, ஜோ டி குரூஸ், ஜி. நாச்சியார், சேசம்பட்டி டி.சிவலிங்கம் ஆகியோரும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மேலும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோரது பெயரும் பத்ம விருதுப் பட்டியலில் உள்ளது.
இதில் கடந்த மாதம் மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருதுக்கு தேர்வாகி இருப்பது அவரது தொண்டர்களிடையேயும், ரசிகர்களிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவு சுவடு இன்னும் பலரது மனதில் அழியாக் காயமாக இருக்கும் வேளையில் ஆறுதலாக இந்த விருது அறிவிப்பு வந்துள்ளது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டரேட் பட்டம், கலைமாமணி பட்டம் போன்ற பல பட்டங்களைப் பெற்றும் மக்கள் மத்தியில் கலியுக கர்ணன், கருப்பு எம்.ஜி.ஆர், புரட்சிக் கலைஞர் போன்ற பல பெயர்களில் குடியிருந்தாலும் திரையிலும், சமூகத்திலும் எண்ணிலடங்கா சாதனைகளை கேப்டன் விஜயகாந்த் நிகழ்த்தியிருந்தாலும் அவருக்கு தேசிய அளவிலான விருதுகள் என்பதே எட்டாக் கனியாக இருந்தது. இந்நிலையில் அவரது மறைவுக்குப் பின் அவரின் பணிகளையும், சாதனைகளையும் கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு பத்ம பூஷன் பட்டம் கொடுத்து அவரின் பெருமைகளை இன்னும் ஒருபடி மேலே உயர்த்திச் சென்றுள்ளது.
கேப்டனைப் பொறுத்தவரையில் எம்.ஜி.ஆர் பாடலான,
மாபெரும் சபையினில் நீ நடந்தால் – உனக்கு
மாலைகள் விழவேண்டும் – ஒரு
மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்
என்ற வரிகளால் அது தற்போது நிறைவேறியிருக்கிறது.