கலைஞர் 100 விழாவில் தனுஷ் பேசிய உரையிலிருந்து சில துளிகள் உங்கள் பார்வைக்கு
கலைஞர் அய்யாவைப் பற்றிப் பேச எனக்கு அறிவோ, வயதோ, அனுபவமோ கிடையாது. ஆனால் அவருடன் எனக்கு பழகக் கிடைத்த சின்ன சின்ன வாய்ப்புகளைப் பற்றி இங்கு சொல்கிறேன். நான் முதன் முதலா ஒரு படத்தோட இன்வட்டேஷனை அவரிடம் கொடுக்கப் போனேன். என்னப் பார்த்ததுமே வாங்க மன்மதராசா என்றார். அட… நம்மைப் பாட்டையும் பார்த்து ரசிச்சிருக்காரேன்னு சந்தோஷப்பட்டேன்.
அப்புறம் இன்வட்டேஷனைப் பார்த்துட்டு என்ன இரட்டை வேஷமா என்றார். ஒரு வேஷம் தான்யான்னு சொன்னேன். அதுல ஒரு பக்கத்துல வில்லேஜ் கெட்டப். இன்னொரு பக்கம் சிட்டி கெட்டப். உடனே இன்னொரு தடவை அதை நல்லா பார்த்துட்டு மொத்த கதையையும் சொல்ல ஆரம்பிச்சிட்டாரு.
அப்படியே நான் அசந்து போயிட்டேன். ஆமாங்கய்யா… அதுதான் கதைன்னு சொன்னேன். எவ்வளவு அனுபவம் இருந்தா இவ்ளோ கரெக்டா சொல்ல முடியும். 50 வருஷ அரசியல் வாழ்க்கையில எவ்வளவு பிசியா இருந்தாலும் 75 படங்களுக்கு மேல கதை வசனம் எழுதியிருக்காருன்னா சும்மாவா…
எப்போ எங்கே என்னைப் பார்த்தாலுமே கன்னத்தை அன்பால வருடி எப்படி இருக்கன்னு கேட்பாரு. அப்படி ஒரு வசீகரமான சிரிப்பு, நகைச்சுவை உணர்வு. அது எல்லாமே கிட்ட இருந்து ரசிக்க வாய்ப்பு கிடைச்சதுங்கறப்போ ரொம்ப பெரிய சந்தோஷம்.
ஒரு கல்யாண வீட்டு பங்ஷன்ல கூட எல்லோரும் நின்னுட்டு போட்டோ எடுக்க இருந்தாங்க. அப்படியே சுத்திப் பார்த்துட்டு தனுஷை எங்கேன்னு கேட்டு என்னைப் பக்கத்துல நிக்க வச்சி போட்டோ எடுக்க சொன்னாரு. அதை விட பெரிய அங்கீகாரம் எனக்கு கிடைச்சிற முடியுமான்னு தெரியல.
இதை விட ரொம்ப சுவாரசியமான விஷயம். அவரு எந்திரன் படம் பார்க்கும் போது அவருக்கு பின்னாடி நான் உட்கார்ந்துருந்தேன். அவரு பக்கத்துல ரஜினி சார் உட்கார்ந்துருந்தாரு. நான் ஏற்கனவே படத்தைப் பார்த்துட்டதனால கலைஞர் அய்யா எப்படி ரசிச்சிப் பார்க்குறாருன்னே பார்த்துக்கிட்டு இருந்தேன்.
ஒரு ஒரு சின்ன சின்ன விஷயங்களையும் ரசிச்ச விதம், கைதட்டுன விதம், ஒரு இடத்துல சிட்டி ரோபா வந்து பட்டையைக் கிளப்பும்போது ரஜினி சாரைப் பார்த்து லேசா தட்டி அப்படியே தலையை அசைத்து பாராட்டினார்.
அவர் மாபெரும் கலைஞர் மட்டுமல்ல. உண்மையான ரசிகர்னும் தெரிஞ்சது.