தனுஷ் நடித்த ’திருடா திருடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான நடிகை சாயா சிங், அந்த ஒரே ஒரு படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தார் என்றே சொல்லலாம். அதிலும் மன்மத ராசா பாடலில் தனுஷுடன் கருப்பு உடை போட்டுக் கொண்டு சாயாசிங் ஆடிய ஆட்டம், இன்றுள்ள 90 ஸ் கிட்ஸ்கள் அனைவருமே மறக்க முடியாத ஒரு விஷயமாகும்.
நடிகை சாயாசிங் பெங்களூரை சேர்ந்தவர். பெங்களூரில் தான் அவர் பள்ளி படிப்பை முடித்தார். பள்ளி படிப்பை முடித்த உடனே அவருக்கு கன்னட திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கடந்த 2000 ஆம் ஆண்டில் கன்னட படத்தில் அறிமுகமான அவருக்கு தொடர்ச்சியாக பல கன்னட படங்களில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. இந்த நிலையில் தான் தனுஷ் நடித்த ’திருடா திருடி’ என்ற திரைப்படத்தில் தனுஷ் ஜோடியாக விஜயலட்சுமி என்ற கேரக்டரில் தமிழில் அவர் அறிமுகமானார்.

அந்த படத்தில் இடம் பெற்ற மன்மத ராசா என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட் ஆனதையடுத்து தமிழ் திரையுலகில் பிரபலமானார் சாயாசிங். தொடர்ந்து அவர் தமிழில் ’கவிதை’ என்ற படத்தில் சுப்புலட்சுமி என்ற கேரக்டரில் நடித்தார். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் அவருக்கு தமிழ் மற்றும் கன்னடத்தில் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில் தான் ’அம்மா அப்பா செல்லம்’ என்ற படத்தில் பாலாவுடன் இணைந்து நடித்தார். இந்த படமும் அவருக்கு பெரிய அளவில் பெயரை பெற்று கொடுக்கவில்லை. அதன் பிறகு அவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆட தொடக்கத்தில் தொடங்கிவிட்டார்.
விஜய் நடித்த ’திருப்பாச்சி’ என்ற திரைப்படத்தில் ’கும்பிட போன தெய்வம்’ என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டவர், சின்ன சின்ன கேரக்டரில் மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வந்தார். அதன் பின்னர் அவருக்கு ’வல்லமை தாராயோ’ என்ற திரைப்படத்தில் ஓரளவு குறிப்பிடத்தக்க வேடம் கிடைத்தது. நந்திதா என்ற கேரக்டரில் இந்த படத்தில் அவர் நடித்திருந்தார்.

இதனையடுத்து ’ஆனந்தபுரத்து வீடு’ என்ற படத்தில் நடித்து பெயர் எடுத்த சாயாசிங், ’இது கதிர்வேலன் காதல்’ ’உயிரே உயிரே’ ’பவர் பாண்டி’ ’இரவுக்கு ஆயிரம் கண்கள்’ ’உள்குத்து’ ’பட்டினப்பாக்கம்’ ’ஆக்சன்’ போன்ற தமிழ் படங்களிலும் அதனை அடுத்து கடந்த ஆண்டு வெளியான ’தமிழரசன்’ உள்பட ஒரு சில படங்களிலும் நடித்தார்.
திரையுலகில் மட்டுமின்றி சின்னத்திரைகளில் அவர் சில தொடர்களிலும் நடித்து வந்தார். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான நாகம்மா என்ற தொடரில் அவர் டைட்டில் கேரக்டரில் நடித்தார். இதனை அடுத்து பூவே உனக்காக, பூவா தலையா போன்ற சீரியல்களில் நடித்திருந்தார். மேலும் கன்னடம் மற்றும் தெலுங்கு சீரியல்கள் எல்லாம் நடித்துள்ளார் சாயாசிங்.
நடிகை சாயா சிங் தமிழ் நடிகர் கிருஷ்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிகர் கிருஷ்ணா அழகிய அசுரா உள்ளிட்ட ஒரு சில படங்களிலும் ’தெய்வமகள்’ உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். நடிகை சாயாசிங் தற்போது கூட சில படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளதுடன் தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்தும் நடித்து வருகிறார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
