கேப்டன் விஜயகாந்தின் வாழ்க்கை வரலாற்றை எழுதினால் வைதேகி காத்திருந்தாள் படத்தை விட்டு விட்டு எழுத முடியாது. வில்லனாகவும், ஆக்சன் ஹீரோவாகவும் நடித்த விஜயகாந்துக்கு புது ரூட் கொடுத்து மென்மையான கதாபாத்திரம் கொடுத்து அதை வைதேகி காத்திருந்தாள் என்ற வெற்றிப் படமாக்கியவர் தான் ஆர். சுந்தர்ராஜன்.
இப்படத்திற்குப் பின்னர் இந்தக் கூட்டணி எங்கிட்ட மோதாதே, காந்தி பிறந்த மண், என் ஆசை மச்சான், அம்மன் கோவில் கிழக்காலே, காலையும் நீயே மாலையும் நீயே போன்ற படங்களைக் கொடுத்தனர். இதில் வைதேகி காத்திருந்தாள் படம் உருவான தருணம் சற்று சுவாரஸ்யமானது.
அவரது இயக்கத்தில் ‘நான் பாடும் பாடல்’ வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. பல தயாரிப்பாளர்கள் அவரைத் தேடி வந்தார்கள். அவர்களிடம் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாக சொன்னார் ஆர் சுந்தரராஜன். “எனக்கு இப்போது சொந்த வீடு வேண்டும். அதை யார் வாங்கி கொடுக்கிறீர்களோ அவர்களுக்குத்தான் அடுத்த படம் செய்வேன்.”உடனடியாக ஏவிஎம் நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தது. அட்வான்ஸாக இரண்டு லட்ச ரூபாய் பணமும் வந்தது.
அந்தப் பணத்தை வாங்கி புது வீடு வாங்குவதற்கான அட்வான்ஸ் கொடுத்து விட்டார் ஆர் சுந்தர்ராஜன். அடுத்த ஒரு சில நாட்களில் கதை தயாரானது. அதுதான் வைதேகி காத்திருந்தாள். ஏ.வி.எம்.முக்கு போய் கதையை சொன்னார் சுந்தரராஜன். ஆனால் ஏ.வி.எம். நிறுவனமோ ஹீரோ யார் என்று கேட்க, விஜயகாந்த் என்று கூறினார் சுந்தர்ராஜன்.
ஏற்கனவே வெளிவந்து வெற்றி பெற்ற ‘நான் பாடும் பாடல்’ படத்தில் சிவகுமார்தானே ஹீரோ? வைதேகி காத்திருந்தாள் படத்திலும் அவரையே நடிக்க வையுங்கள்.” என்று ஏவிஎம் கூற, ஆர் சுந்தர்ராஜன் உறுதியாகச் சொன்னார். “அந்த வெள்ளைச்சாமி கேரக்டருக்கு விஜயகாந்த்தான் பொருத்தமாக இருப்பார் என்று. ஆனால் ஏவிஎம் சம்மதிக்காமல் கொடுத்த இரண்டு லட்ச ரூபாயை திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்றது. இதனால் அதிர்ச்சியில் உறைந்தார் இயக்குநர்.
ஏனெனில் ஏவிஎம் கொடுத்த அந்த பணத்தை வாங்கித்தான் புது வீடு வாங்குவதற்கான அட்வான்ஸ் தொகையாக கொடுத்து விட்டிருந்தார் அவர். வேறு பணம் எதுவும் அவர் கைவசம் இல்லை. என்ன செய்வதென தெரியாமல் தடுமாறினார் ஆர் சுந்தரராஜன்.
அப்போது தூயவன் என்ற கதாசிரியர் அவருக்குக் கைகொடுக்க அடுத்த சில நிமிடங்களில் பஞ்சு அருணாச்சலத்தின் வீட்டில் அமர்ந்து இருந்தார்கள்.
‘வைதேகி காத்திருந்தாள்’ கதையை மறுபடியும் ஆர் சுந்தரராஜன் சொல்ல.. உடனடியாக இரண்டு லட்ச ரூபாய் ஆர் சுந்தரராஜன் கைகளில் கொடுக்கப்பட, ஏவி எம்மிடம் வாங்கிய பணத்தை திரும்ப கொடுத்துவிட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டார் ஆர் சுந்தரராஜன்.
தூயவன் வைதேகி காத்திருந்தாள் படத்தின் தயாரிப்பாளர் ஆனார். படமும் வெளியாகி 100 நாட்களைக் கடந்து வெற்றி பெற்றது.