திரை உலகில் சிலர் சிறப்பாக நடித்து வந்த போதிலும் சிலருக்கான சரியான வாய்ப்பு பெரும்பாலும் கிடைப்பதில்லை என்பது நிதர்சனமான உண்மை. இந்த விஷயத்தில் பிரபல நடிகர் கணேஷ் வெங்கட்ராமும் விதிவிலக்கு கிடையாது.
கடந்த 2003 ஆம் ஆண்டு மிஸ்டர் இந்தியா பட்டம் பெற்ற கணேஷ் வெங்கட்ராம், அதன் பின்னர் பல விளம்பர படங்களில் நடித்தார். மாடலாக இருந்த நிலையில் தான் அவருக்கு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவான ’அச்சம் தவிர்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்த நிலையில் அவருக்கு பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்திருந்தது.
இதனை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட கணேஷ் வெங்கட்ராம், நான்காவது இடத்தையும் அந்த சீசனில் பிடித்திருந்தார். முன்னதாக, கடந்த 2006 ஆம் ஆண்டு ஒரு ஆங்கில திரைப்படத்தில் அறிமுகமான கணேஷ் வெங்கட்ராம், தமிழில் பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் உருவான ’அபியும் நானும்’ என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் அவர் ஒரு சீக்கியராக நடித்திருந்ததுடன் திரிஷாவுக்கு ஜோடியாகவும் நடித்து அசத்திருப்பார்.
இதனைத் தொடர்ந்து கமல்ஹாசனின் ’உன்னைபோல் ஒருவன்’ என்ற திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக மிரட்டி இருப்பார் கணேஷ் வெங்கட்ராம். அதே போன்றொரு கதாபாத்திரத்தில் தான் தனி ஒருவன் படத்திலும் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்திருந்தார். கணேஷ் திரை பயணத்தில் மிக முக்கியமான படம் மற்றும் கதாபாத்திரமாகவும் அது அமைந்திருந்தது. இதனிடையே பனித்துளி, தீயா வேலை செய்யணும் குமாரு, இவன் வேற மாதிரி, அச்சாரம், பள்ளிக்கூடம் போகலாமே, தொடரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் வணங்காமுடி என்ற திரைப்படம் விரைவில் வெளியாகவும் உள்ளது. திரைப்படங்களில் மட்டுமின்றி அவர் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தமிழில் அவர் மாயாவி, வேந்தர் வீட்டு கல்யாணம், அச்சம் தவிர், திருமகள், வணக்கம் தமிழா, கண்ணான கண்ணே, தாலாட்டு, ஸ்வீட் காரம் காபி உள்ளிட்ட பல தொடர்கள் மற்றும் ரியாலிட்டி ஷோவில் பணியாற்றி உள்ளார்.
பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவராக இருந்த போது தான் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தது. தற்போது அவர் நினைத்தேன் வந்தாய் என்ற தொடரில் நடித்து வரும் நிலையில், பிக்பாஸ் வெற்றி காரணமாக சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் இந்த தொடரும் பிரபலமாக உள்ளது.
கடந்த ஆண்டு வெளியான விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் சற்று வில்லத்தனமான கேரக்டரில் நடித்திருப்பார் அவரது தொழிலதிபர் கேரக்டரில் நடித்ததை பார்த்து பலர் அவர் உண்மையிலேயே தொழிலதிபர் என்று நினைத்து அவரை அணுகியதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
ஜென்டில்மேன் போல் இருக்கும் அவரை பார்த்தவுடன் அனைவருக்கும் பிடித்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. போலீஸ் கேரக்டர், ஜென்டில்மேன் கேரக்டர், தொழிலதிபர் கேரக்டருக்கு அவர் மிகவும் பொருத்தமாக இருப்பார் என்பதால் திரையுலகினர் அவரை அந்த கேரக்டர்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.