ஆக்சன் காட்சிகளில் விஜயகாந்துக்கே டஃப் கொடுத்தவர்.. தமிழ் சினிமாவில் பல ஸ்டண்ட் மாஸ்டர்களை உருவாக்கிய ராக்கி ராஜேஷ்!

By Bala Siva

Published:

சினிமாவில் அதிக ரிஸ்க் எடுத்து உருவாகும் விஷயம் என்றால் நிச்சயம் அது சண்டைக்காட்சிகள் தான். இதில் நடிக்கும் ஸ்டண்ட் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் கூட அதிகம் காயமடைந்து விடுவார்கள். இதனால் ஆபத்து அதிகமுள்ள ஒரு தொழிலாகவும் ஸ்டண்ட் என்ற துறை உள்ள நிலையில், அதன் மூலம் பிரபலம் ஆனவர் தான் ராக்கி ராஜேஷ்.

ரஜினிகாந்த், விஜயகாந்த் உட்பட பல நடிகர்களின் திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராகவும், ஸ்டண்ட் நடிகராகவும் நடித்தவர் ராக்கி ராஜேஷ். தமிழ் திரையுலகின் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டர்களாக தற்போது இருப்பவர்கள் பலர் இவரிடம் தான் உதவியாளர்களாக இருந்துள்ளனர். குறிப்பாக பொன்னம்பலம், ராம் லக்ஷ்மன், ஸ்டண்ட் சிவா, கில்லி சேகர் உள்பட ஒரு சிலர் இவரிடம் உதவியாளராக பணிபுரிந்து அதன் பிறகு மாஸ்டர்கள் ஆனவர்கள்.

கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் ராக்கி ராஜேஷ் தமிழ் திரை உலகில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். முதல் முதலாக அவர் விஜயகாந்த் நடித்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்ற திரைப்படத்தில் தான் ஸ்டண்ட்  மாஸ்டராக அறிமுகமானார். அதன் பிறகு விஜயகாந்த் நடித்த பல படங்களில் அவர் ஸ்டண்ட் மாஸ்டர் மற்றும் நடிகராகவும் பணிபுரிந்தார்.

சின்ன கவுண்டர், பரதன், தாய் மொழி, ஏழை ஜாதி, கோவில் காளை, ராஜதுரை, செந்தூரப்பாண்டி, சேதுபதி ஐபிஎஸ், ஹானஸ்ட் ராஜ், செந்தமிழ் செல்வன், என் ஆசை மச்சான், பெரிய மருது, கருப்பு நிலா, திருமூர்த்தி, காந்தி பிறந்த மண் உள்ளிட்ட படங்களில் விஜயகாந்துடன் அவர் மோதியுள்ளார். விஜயகாந்த் மற்றும் இவருக்கும் இடையிலான சண்டை மாஸாக இருக்கும் என்பதால் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருந்தது.

rocky

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் எஜமான்  உள்ளிட்ட ஒரு சில படங்களிலும் பிரபுதேவாவின் ராசய்யா, அஜித் நடித்த காதல் மன்னன், சூர்யா நடித்த சிங்கம் 2, ஜெயம் ரவி நடித்த தில்லாலங்கடி, விஷால் நடித்த தோரணை, விஜய் நடித்த குருவி உள்பட  ஏராளமான முன்னணி நடிகர்களின் படங்களில் இவர் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்துள்ளார். மேலும் இவர் சில படங்களில் ஸ்டண்ட் நடிகராகவும் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார்.

முதல் முதலாக அவர் பிரசாந்த் நடித்த எங்க தம்பி என்ற திரைப்படத்தில் நடிக்க தொடங்கிய நிலையில் அதன்பிறகு கல்யாண கலாட்டா, கள்ளழகர், பெரியண்ணா, ஜேம்ஸ் பாண்டு, கஜேந்திரா, மாயாவி, தர்மபுரி உள்ளிட்ட பல படங்களில் ஸ்டண்ட் நடிகராகவே நடித்துள்ளார்.

தமிழக அரசின் சிறந்த சண்டை பயிற்சி விருதை அவர் சின்ன கவுண்டர் மற்றும் செம்பருத்தி படத்திற்காக பெற்றுள்ளார். அது மட்டுமின்றி மேலும் சில விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழ் சினிமாவில் தற்போதைய ஸ்டண்ட் கலைஞர்களுக்கு முன்னோடியாக இருந்தவர் ராக்கி ராஜேஷ். அவரிடம் பணி புரிந்தவர்கள் தான் இன்று தமிழ் திரையுலகின் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டர்களாக உள்ளனர்.