தமிழ் திரை உலகில் தனித்தனியாக காமெடி நடிகர்கள் மற்றும் நடிகைகள் இருந்தது போல, நிஜ வாழ்க்கையில் தம்பதிகளாக இருந்தவர்களும் காமெடி நடிகர்களாக இணைந்து நடித்து பிரபலமாகி உள்ளனர். அந்த வகையில், என் எஸ் கிருஷ்ணன் – டி ஏ மதுரம், தங்கவேலு – எம் சரோஜா போன்றவர்கள் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளனர். அப்படி தமிழ் திரை உலகில் காமெடி நட்சத்திரங்களாக ஜொலித்த தம்பதிகள் தான் கணேஷ் – ஆர்த்தி.
இருவருமே தனித்தனியாகவும், இணைந்தும் பல திரைப்படங்களில் நடித்துள்ளனர். டி ராஜேந்தர் இயக்கத்தில் உருவான ’என் தங்கை கல்யாணி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் கணேஷ். அதன் பிறகு சிவா, நீங்களும் ஹீரோ தான், தையல்காரன், சுந்தரகாண்டம், பார்வதி என்னை பாரடி, கோவில், செல்வம், பந்தயம், நேபாளி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பேய் மாமா என்ற படத்திலும் கூட அவர் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் தான் நடித்துள்ளார்.
திரை உலகில் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் நடித்துள்ளார். மீண்டும் மீண்டும் சிரிப்பு என்ற தொடரில் அறிமுகமானவர் காசளவு நேசம், பொம்மலாட்டம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். இதில் மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் ஆர்த்தியுடன் இணைந்து அவர் நடனம் ஆடியதுடன் 5 லட்ச ரூபாய் பரிசையும் அவர்கள் வென்று அசத்தி இருந்தனர்.
கணேஷ் போலவே ஆர்த்தியும் தமிழ் திரையுலகில் மிகச்சிறந்த காமெடி நடிகையாக பல படங்களில் நடித்துள்ளார். நடிகை ஆர்த்தியும் சிறுவயதிலிருந்தே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். கணேஷ் அறிமுகமான என் தங்கை கல்யாணி படத்திலும் இவர் நடித்துள்ளார். அதன் பிறகு காவலுக்கு கெட்டிக்காரன், அஞ்சலி, சத்ரியன் உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன சிறு குழந்தையாக நடித்துள்ளார்.
இதனை அடுத்து 2004 ஆம் ஆண்டு அருள் என்ற படத்தில் ஜோதிகாவின் தோழியாக நடித்த இவர் அதன் பிறகு ஏராளமான படங்களில் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார். பாரசீக மன்னன் என்ற படத்தில் சிறப்பாக நடிப்பதற்காக தமிழக அரசின் சிறந்த காமெடி நடிகை என்ற விருதை ஆர்த்தி பெற்றுள்ளார். படிக்காதவன் படத்தில் தனுஷுடன் வரும் அருக்காணி என்ற கதாபாத்திரம், கிரி படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடித்த காட்சிகள் என அனைத்துமே ஆர்த்திக்கு சிறந்த காமெடி நடிகை என்ற பெயரை வாங்கிக் கொடுத்தது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டுள்ளார். என்பதும் மானாட மயிலாட, கலக்கப்போவது யாரு, சன் குடும்பம் விருதுகள், அன்பே வா உள்ளிட்ட பல சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் தோன்றியுள்ள ஆர்த்தியின் காமெடி டைமிங்கள் மிகவும் ரசிக்கும் வகையில் அமைந்திருக்கும்.
தற்போது இருவரும் தங்களுக்கு ஏற்ற வாய்ப்புகள் கிடைத்தால் நடிக்க தயாராக உள்ள நிலையில் தமிழ் திரையுலகம் இந்த திறமையான தம்பதியை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.