Siragadikka Aasai: விஜய் டிவியில் தற்போது சிறகடிக்க ஆசை என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், நாயகி மீனாவின் தந்தையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நரசிம்மராஜூ. பழம்பெரும் நடிகரான இவர் இது தவிர வேறு சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.
செம்பருத்தி, என்றென்றும் புன்னகை, யாரடி நீ மோகினி, அபியும் நானும் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது அவர் முத்தழகு என்ற சீரியலில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு சீரியலில் நடித்து வரும் இவர் ஒரு காலத்தில் மிகப்பெரிய கதாநாயகனாக வெள்ளி திரையில் ஜொலித்தார் என்றால் நம்ப முடிகிறதா. ஆனால் அதுதான் உண்மை.
நரசிம்ம ராஜூ கடந்த 1970களில் ஏராளமான தெலுங்கு திரைப்படங்களில் நாயகனாக நடித்தார். தமிழில் இவர் ஜகன்மோகினி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். விட்டலாச்சாரியார் மாயாஜால காட்சிகளில் இவர் நடித்து அசத்திருந்தார். அதன் பிறகு இவருக்கு தமிழில் ஒரு சில வாய்ப்புகள் கிடைத்த போதிலும் தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்தினார். ஒரு கட்டத்தில் திரைப் படங்களில் நடிக்க வாய்ப்பு குறைந்த பின்னர் அவர் தொலைக்காட்சி சீரியலில் நடிக்க தொடங்கினார்.
முதலில் அவர் தெலுங்கு சீரியலில் நடிக்க ஆரம்பித்த நிலையில் செந்தூரப்பூவே என்ற சன் டிவியில் ஒளிபரப்பான தமிழ் சீரியலில் நடித்தார். அதன் பிறகு அவருக்கு செம்பருத்தி, சிறகடிக்க ஆசை உள்பட ஏராளமான சீரியல்களை நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது நரசிம்ம ராஜா அவர்களுக்கு 71 வயது ஆகிய போதிலும் இன்றைக்கும் அவர் தனது வயதுக்கேற்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.
நரசிம்மராஜு அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவருடைய மகன் கனடாவில் உள்ள வங்கியில் உயர் பொறுப்பில் இருக்கிறார். மகன், மகள் மற்றும் பேர குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் நரசிம்மராஜு தொலைக்காட்சி தொடர்களில் இன்றும் பிசியாக இருக்கிறார் என்பதுடன் வாரத்தில் ஐந்து நாட்கள் அவர் படப்பிடிப்புக்கு சென்று வருவதாகவும் கூறப்படுகிறது.