கடைசி வரை மனோரமாவின் நடிப்பைப் பாராட்டாத தாய்… லேடி சிவாஜிக்கே இப்படி ஒரு நிலைமையா?

By John A

Published:

தமிழ் சினிமாவில் ஆச்சி என்றும், லேடி சிவாஜி என்றும் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் ஆச்சி மனோரமா. 5 முதல்வர்கள், 5 தலைமுறை நடிகர்கள் 1500-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் என மனோரமாவின் சாதனையும் இடத்தையும் இன்று மட்டுமல்ல இன்னும் எத்தனை தலைமுறையானாலும் யாராலும் நிரப்ப முடியாது.

காமெடியில் நடிகர்கள் கொடிகட்டப் பறந்த காலகட்டங்களில் நடிகைகளுக்கும் காமெடி வேடங்கள் வரும் என்று நிரூபித்து அதனை திரையில் சாதித்துக் காட்டியவர். இவருக்கு அடுத்தபடியாக கோவை சரளா அந்த இடத்தை நிரப்பினர். அதன்பின் யாராலும் இவர்களை அசைக்க முடியவில்லை.

12 வயதில் இருந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய மனோரமாவுக்கு முதல் படமே சிங்கள மொழியில். தமிழில் அவர் நடித்த முதல் திரைப்படம் மாலையிட்ட மங்கை. கவிஞர் கண்ணதாசன் கதை மற்றும் வசனம் எழுதி அவரே தயாரித்த அப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் அறிமுகமாமனார். அப்பாத்திரத்தில் நடிக்க அவர் முதலில் தயங்கவே கண்ணதாசன்தான், “கதாநாயகிகளாக நடிக்க பலரும் உண்டு. ஆனால் நகைச்சுவை நடிகைக்கான வெளியை நீதான் நிரப்ப வேண்டும்” என்று ஊக்கப்படுத்தி நடிக்க வைத்தார்.

ஜனாதிபதிக்கே கார் தராத நடிகவேள் எம்.ஆர்.ராதா… இறுதியில் எதற்கு பயன்படுத்தினார் தெரியுமா?

மனோரமாவுக்கு எல்லாமே அவரது தாயாரும், அவரது மகனும்தான். மனோரமாவின் தாய் கடைசிவரை மனோரமாவின் படங்களைப் பார்த்துவிட்டு, ‘இன்னும் நீ நல்லா நடிக்கணும்’ என்றுதான் சொல்வாராம். ஒருமுறை கூட ‘நீ நல்லா நடிச்ச’ என்று சொல்லி பாராட்டியதே கிடையாதாம். இதுகுறித்து மனோரமாவிடம் கேட்டபோது, ‘குளவி புழுவைக் கொட்டிக் கொட்டி குளவியாக்குவதைப்போல, என் தாயார் நீ இன்னும் நல்லா நடிக்கணும்னு என்று சொல்லிச் சொல்லியே என்னை சிறந்த நடிகையாக உயர்த்தினார்’ என்று விளக்கமளித்தார்.

மனோரமாவை ‘பெண் சிவாஜி’ என ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் பத்திரிகையாளரும் நடிகருமான சோ. அவர் சொன்னதை மெய்ப்பிக்கும் வகையில், நடிகர் திலகம் போலவே ஏ.பி.நாகராஜன் இயக்கிய ‘கண்காட்சி’ என்றபடத்தில் ஒன்பது கதாபாத்திரங்களில் நடித்தார் ஆச்சி மனோரமா. ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதே பெரும்பாடு என இவர் யோசித்தபோது, ‘உன் திறமை மீது எனக்கு நம்பிக்கையிருக்கு. தைரியமா செய்’ என்று நம்பிக்கையை ஊட்டி நடிக்க வைத்தார் இயக்குநர். மனோரமாவுக்குச் மிகச்சிறந்த நடிகை என்ற பெயரை வாங்கிக்கொடுத்தது, இப்படம்.

இவரது குரல் வளத்தையும், பாடும் திறமையையும் கண்ட இசையமைப்பாளர்கள் பலர் இவரைப் பாட வைத்தனர்.