சினிமாவில் இயக்குநர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள் ஹீரோக்களாக மாறி வரும் நிலையில் ஸ்டண்ட் மாஸ்டர்களும் ஹீரோ அரிதாரம் பூச ஆரம்பத்துவிட்டனர். அதற்கு முதலில் பிள்ளையார் சுழி போடப் போகிறவர் வேறுயாருமில்லை. ஆக்சனில் அதகளம் செய்யும் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின் தான்.
பார்ப்பதற்கு தாய்லாந்து, வியட்நாம் நாட்டினைச் சேர்ந்த மக்களைப் போல் தோற்றமளிக்கும் பீட்டர் ஹெயின் உண்மையான சென்னைக்காரர். சினிமாவில் இவரது தந்தை சண்டைப் பயிற்சியாளராகப் பணிபுரிந்து வர சினிமா ஆசை பீட்டர் ஹெயினுக்கும் வந்துள்ளது. கனல் கண்ணன், விஜயன் போன்ற ஸ்டண்ட் மாஸ்டர்களிடம் முறைப்படி தொழில் கற்று பின்னர் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக அவதாரம் எடுத்தார்.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய மின்னலே திரைப்படத்தின் மூலம் ஸ்டண்ட் மாஸ்டராக அவதாரம் எடுத்தவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற மொழிப் படங்களில் இன்று தவிர்க்க முடியாத ஸ்டண்ட் மாஸ்டராக இருக்கிறார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான அந்நியன் படத்தின் சண்டைக் காட்சிகள் இவருக்கு பெரும் புகழை ஈட்டிக் கொடுத்தது. மேலும் புலி முருகன் படத்திற்காக சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான தேசிய விருதையும் பெற்றார். கஜினி (இந்தி), சிவாஜி, பாகுபலி போன்ற படங்கள் இவரது திறமையை பறைசாற்றுவதாக இருந்தது.
எனக்கும் ஒரு சான்ஸ் கொடுங்க.. மார்க்கெட் இழந்து ஓப்பனாகக் கேட்ட பிரபல இசையமைப்பாளர்
இந்நிலையில் இயக்குநர் வெற்றி இயக்கும் புதிய படம் ஒன்றில் பீட்டர் ஹெயின் ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படம் குறித்து இயக்குநர் வெற்றி கூறுகையில், “இப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாக உள்ளது. எனவே இப்படத்திற்கு மாஸ்டர் நடித்தால் சிறப்பாக இருக்குமென தோன்றியது. உடனே அவரை அணுகிக் கேட்க சம்மதம் தெரிவித்தார். விரைவில் ஷுட்டிங் தொடங்கும்.“ என்றார்.
தான் ஹீரோவாக நடிக்கும் படம் பற்றி பீட்டர் ஹெயின் கூறும் போது, “இந்தப் படத்தில் நான் காட்டுவாசியாக நடிக்கிறேன். இப்படத்தில் நடிப்பதற்கென நடிப்புப் பயிற்சி எடுத்துள்ளதாகவும், இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறினார். மேலும் படத்தின் அப்டேட்கள் விரைவில் ஒவ்வொன்றாக வெளியாகும் எனவும் பீட்டர் ஹெயின் கூறியுள்ளார்.
பீட்டர் ஹெயினின் அமைத்த சண்டைக் காட்சிகளை கண்டு களித்த ரசிகர்கள் இனி அவரே திரையில் செய்யப் போகும் சம்பவத்திற்காக காத்திருக்கின்றனர்.