விஜயகாந்தை தமிழ்சினிமா உலகில் சிம்மாசனம் போட்டு உட்கார வைத்த அந்த நாலு படங்கள்!

By Sankar Velu

Published:

1980 முதல் 2000 வரை தமிழ் சினிமா உலகில் எத்தனையோ அதிரடி ஆக்ஷன் ஹீரோக்கள் வலம் வந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த். 90களில் தமிழ் சினிமாவின் கோபக்கார இளைஞர். ரஜினி, கமல் மற்றும் சரத்குமார் போன்ற நடிகர்களை விட அவரது கோபம் பார்ப்பதற்கு ரொம்பவே யதார்த்தமாக இருக்கும். அந்த விஷயத்தில் இவர் தான் நம்பர் 1 என்றே சொல்லலாம். சிறுவயதிலேயே அநியாயங்கள் எங்கு நடந்தாலும் பொங்கி விடுவாராம். அதனால் அவன் எங்கு போய் வம்பை இழுத்து வந்து விடுவானோ என்று தந்தை அடிக்கடி பயப்படுவாராம். அதே நேரம் பொதுவாழ்வில் மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டார். துயரில் தவிப்பவர்களுக்கு எதிர்பலன் கருதாது உதவினார்.

எம்ஜிஆரின் படங்கள் மீது கொண்ட ஈடுபாட்டால் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார். ஆரம்பத்தில் அவரது கருப்பு நிறத்தைக் கண்டு நிராகரித்தவர்கள் பின்னாளில் அவரது கால்ஷீட்டுக்காகக் காத்துக்கிடந்தனர். விஜயகாந்தின் படங்களில் அந்த 4 படங்கள் அவரது திரையுலக சாம்ராஜ்யத்தை உலகுக்கு எடுத்துக் காட்டும்.

வைதேகி காத்திருந்தாள்

1984ல் வெளியான வைதேகி காத்திருந்தாள் படம் அவரது திரையுலக வரலாற்றில் ஒரு மைல் கல். வழக்கமான அவரது ஆக்ஷன் கதைகளத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதை அம்சம் கொண்டது. காதல், பிரிந்த காதலன், கிராமத்தின் பாதுகாப்பு இவை தான் படத்தின் சிறப்பம்சங்கள்.

ஆர்.சுந்தரராஜன் இயக்கியுள்ளார். இளையராஜாவின் இசையில் பாடல்கள் அத்தனையும் செம மாஸ். இந்தப்படத்திற்கு விஜயகாந்த் தான் ஹீரோவாக வேண்டும் என்று அவரது கால்ஷீட்டுக்குக் காத்துக்கிடந்து படமாக்கினார்களாம்.

கேப்டன் பிரபாகரன்

Captain Praphakaran
Captain Praphakaran

அடுத்ததாக 1991ல் வெளியான கேப்டன் பிரபாகரன். இது விஜயகாந்தின் 100வது படம். அதற்கு முன்பு வரை கமல், ரஜினி உள்பட மற்ற முன்னணி ஹீரோக்களுக்கு 100வது படம் தோல்வியாகவே அமைந்தது.

ஆனால் விஜயகாந்தின் 100வது படமான கேப்டன் பிரபாகரன் பட்டி தொட்டி எங்கும் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. காரணம் படத்தின் ஆக்ஷன் காட்சிகளும், வசனங்களும் தான். லியாகத் அலிகான் கதை வசனம் எழுத, ஆர்.கே.செல்வமணி இயக்கியுள்ளார்.

ரமணா

2002ல் வெளியான ரமணா. படத்தின் கதை சிறப்பு வாய்ந்தது. தவறான கட்டுமானத்தின் காரணமாக அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது. அதில் குடும்பத்தை இழக்கும் ஒரு சாதாரண குடிமகனின் கதை. சமூகத்தில் ஊழலுக்கு காரணமான ஒட்டுமொத்த அரசு இயந்திரங்களையும், தனியார் நிறுவனங்களையும் பழிவாங்குகிறான். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.

சொக்கத் தங்கம்

2003ல் வெளியான சொக்கத் தங்கம். கே.பாக்யராஜ் இயக்கியுள்ளார். அக்கா சென்டிமெண்ட் மற்றும் ஆக்ஷன் படம். தேவா இசை அமைத்துள்ளார்.

விஜயகாந்த் பல தேச பக்தி படங்களில் நடித்தார். அங்கு அவர் ஒர கனமான போலீஸ் கதாபாத்திரத்தில், ராணுவ தளபதியாக, எதிரி நாடுகளின் தீய எண்ணங்களில் இருந்து நாட்டைக் காப்பாற்றும் வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

இவரது படங்கள் ஏராளமான சராசரி வர்க்க குடும்பத்தினர்களை ஈர்த்தது. தமிழகத்தில் பி, சி சென்டர்களில் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் பெற்றது.

எளிமையின் இலக்கணமாக வாழ்ந்து கைமாறு கருதாமல் உதவிகள் பல செய்த விஜயகாந்த் இன்று இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், அவர் செய்த உதவிகளையும், அவரது படங்களையும் ரசிகர்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.