விடாமுயற்சி படத்திற்கு வந்த புதிய சிக்கல்!.. அஜர்பைஜானில் இருந்து ஓட்டம் எடுத்த அஜித்.. என்ன ஆச்சு?

By Sarath

Published:

இந்த ஆண்டு அஜித் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விடாமுயற்சி திரைப்படம் ஒரு அதிகாரப்பூர்வ அப்டேட் கூட கொடுக்காமல் கடைசிவரை ரசிகர்களை ஏமாற்றி வந்த நிலையில் அடுத்த ஆண்டும் திட்டமிட்ட படி மொத்த ஷூட்டிங் முடிந்து படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி சங்கர், அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிப்பில் விடாமுயற்சி படம் உருவாக்கி வருகிறது. இந்த படத்துக்காக சுமார் 15 கிலோ வரை தனது உடல் எடையை குறைத்து சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்து வருகிறார் அஜித்.

அஜித் படத்தின் படப்பிடிப்பு பாதிப்பு:

இந்த ஆண்டு பொங்கலுக்கு விஜயின் வாரிசு படத்துடன் மோதிய அஜித்தின் துணிவு திரைப்படம் பெரிய வசூல் ஈட்டவில்லை. மேலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்த திரைப்படம் சுமாரான இரண்டாம் பாதி காரணமாக மொத்தமாக சொதப்பி விட்டது. இந்நிலையில், அஜித் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் விடாமுயற்சி படம்தான் ஒரே நம்பிக்கையாக உள்ளது.

ஆனால் தற்போது, தொடர்ந்து அடிக்கடி அந்த படத்தின் படப்பிடிப்புக்கு தடை ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் அந்த படத்தில் கலை இயக்குனர் மிலன் உயிர் இழந்தது பெரும் அதிர்ச்சியை விடாமுயற்சி படக்குழுவுக்கு ஏற்படுத்தியது. அடுத்து படத்தின் ஒளிப்பதிவாளர் மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

விடாமுயற்சி தாமதம் ஆகுமா?:

அஜர்பைஜானில் படப்பிடிப்புக்கு சில காலம் ரெஸ்ட் கொடுத்து விட்டு அஜித் சென்னைக்கு வந்திருந்தார். மிக்ஜாம் புயல் சமையத்தில் வெள்ளத்தில் சிக்கிய அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷாலுக்கு உதவி செய்து விட்டு மீண்டும் அஜர்பைஜானுக்கு சென்று விட்டார்.

சமீபத்தில் அஜர்பைஜானில் நடிகை பாவனா தனது படத்தின் ஷூட்டிங்கிற்கு வந்த நிலையில் இருவரும் சந்தித்துக் கொண்ட வீடியோ காட்சிகளும் பாவனாவை காக்க வைத்ததற்காக அஜித் மன்னிப்பு கேட்டதும் வெளியாகி இருந்தன. இந்நிலையில், தற்போது அஜர்பைஜானில் கடும் மணல் புயல் வீசி வருவதால் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறவில்லை என்றும் மீண்டும் விடாமுயற்சி படத்திற்கு பிரேக் விடுத்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிப்ரவரி இறுதிக்குள் படத்தின் ஷூட்டிங்கை முடித்து விட்டு ஏப்ரலில் ரிலீஸ் செய்ய அஜித் திட்டமிட்டு இருந்தாலும், இயற்கை அந்த படத்தை அவ்வளவு சீக்கிரம் ரிலீஸ் செய்ய விடாது என்றே கூறுகின்றனர்.