தலைவாசல் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான குணச்சித்திர நடிகர் விஜய், பின்னர் தனது பெயரையும் ‘தலைவாசல்’ விஜய் என்றும் மாற்றிக் கொண்டார். தொடர்ந்து, கமல்ஹாசன் மற்றும் சிவாஜி கணேசன் இணைந்து நடித்த ‘தேவர் மகன்’ படைதலும் முக்கிய கதாபாத்திரத்தில் தலைவாசல் விஜய் நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, பல முன்னணி நடிகர்கள் மற்றும் முன்னணி இயக்குனர்கள் படத்தில் சிறந்த குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ள தலைவாசல் விஜய், வில்லன் கதாபாத்திரங்களிலும் பல படங்களில் தனது பணியை அற்புதமாக செய்துள்ளார். அதே போல விஜயகாந்துடன் இணைந்து வல்லரசு, நரசிம்மா, தென்னவன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான தலைவாசல் விஜய், விஜயகாந்துடன் ஒரு படத்தில் நடித்த போது எடுத்த ரிஸ்க் பற்றிய சில தகவல்கள் அதிக கவனம் பெற்று வருகிறது. விஜயகாந்த் நடிப்பில் உருவான பெரிய மருது என்ற திரைப்படத்தில், தலைவாசல் விஜய்யின் கையை அவர் வெட்டுவது போன்ற காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும்.
முன்னதாக, இந்த காட்சியை எடுப்பதற்கு முன்பாக அதில் பயன்படுத்தக் கூடிய டம்மி கத்தியை படக்குழுவினர் எடுத்து செல்ல மறந்து விட்டதாக தெரிகிறது. கையை ஆக்ரோஷமாக விஜயகாந்த் வெட்டும் காட்சி என்பதால் என்ன செய்வதென்று தெரியாமலும் படக்குழுவினர் முழித்துள்ளனர். இன்னொரு பக்கம், நிஜ கத்தி ஒன்று மட்டும் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
அனைவரும் குழப்பத்தில் இருந்த போது என்ன நடந்தது என விஜயகாந்த் அவர்களிடம் கேட்க, டம்மி கத்தியை மறந்தது பற்றியும் தெரிவித்துள்ளனர். உடனடியாக இது பற்றிய தகவலை தலைவாசல் விஜய்யிடமும் பகிர்ந்துள்ளார் விஜயகாந்த். அத்துடன் ஒரிஜினல் கத்தி தான் இருப்பதாகவும், அதனை தான் பயன்படுத்த போவதாகவும் உனக்கு அதில் சம்மதமா என்றும் விஜயகாந்த் தலைவாசல் விஜய்யிடம் கேட்டுள்ளார்.
முதலில் பயந்து போன தலைவாசல் விஜய், பின்னர் யோசித்து விட்டு தனக்கு என்ன ஆனாலும் விஜயகாந்த் பார்த்து கொள்வார் என்ற நம்பிக்கையில் சரி என்றும் சொல்லி உள்ளார். தலைவாசல் விஜய் கைக்கு பதிலாக ஒரு வாழைத் தண்டும் விஜயகாந்த் வெட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டிருந்தது. நிஜ கத்தியால் விஜயகாந்தும் சரியாக டம்மி கையை வெட்டினார்.
முன்னதாக, தனது கையே போனாலும் கேப்டன் தனது வாழ்க்கையை பார்த்து கொள்வார் என சக நடிகர் நினைக்கும் அளவுக்கு ஒரு சிறந்த மனிதனாக தான் இருந்துள்ளார் விஜயகாந்த்.