பத்து ரூபாயை சம்பளமாகப் பெற்ற சிவாஜி பட இயக்குனர்… நாடக ஆர்வம் வரக் காரணமே இதுதானாம்…!

By Sankar Velu

Published:

எம்ஜிஆர், சிவாஜி என்ற இருபெரும் ஜாம்பவான்களுக்கு பல சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்தவர் பழம்பெரும் இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர். ஆனாலும் இவர் சிவாஜியை வைத்தே பல படங்களை இயக்கியுள்ளார். எங்கிருந்தோ வந்தாள், தெய்வமகன், பாபு, பாரதவிலாஸ் ஆகிய சிவாஜி படங்களை இயக்கியுள்ளார். எம்ஜிஆரை வைத்து இவர் எடுத்த சூப்பர்ஹிட் படம் அன்பேவா.

இவர் சிறுவயது முதலே நாடகங்களில் நடிப்பதற்கு ஆர்வம் கொண்டு இருந்தார். அதே நேரம் சினிமாவிலும் அளவுகடந்த ஆர்வம். அவருக்கு அந்த எண்ணம் வந்தது எப்படி என்று அவரே சொல்கிறார். பார்க்கலாமா…

சிறுவயதிலேயே நடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்தேன். நாடகங்களில் நடிப்பது, கூத்தாடிப்பையன் என்று கூட சொல்வார்கள். சினிமாக்காரனாக இருந்தால் எங்கள் குடும்பங்களில் பெண் கொடுக்க மாட்டார்கள்.

முதலில் மிஸ் சந்திரா என்ற பெயரில் பத்திரிகைகளுக்குக் கதை எழுதினேன். என் வயதுக்கு மீறிய அல்லது தகுந்த சில கிளு கிளுப்பான விஷயங்களும் அதில் இருந்தன.

AC.Thirulogachandar
AC.Thirulogachandar

மிஸ் சந்திரா என்ற கவர்ச்சி எழுத்தாளனாக இருந்ததால் எனக்குக் கடிதங்கள் வர ஆரம்பித்தன. நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அதிகமாக இருந்தது. நான் சில நாடகங்களில் நடித்ததற்கே வீட்டில் பெரிய பூகம்பமே கிளம்பியது. தந்தைக்கு அது பிடிக்கவில்லை. அவர் என்னை கலெக்டராகவோ, பெரிய ஆபீஸராகவோ காண ஆசைப்பட்டார்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே, முகம் தெரியாமல் வீட்டுக்குத் தெரியாமல் ரேடியோ நாடகங்களில் நடிக்கலாமே என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. அகில இந்திய ரேடியோவுக்கு எழுதிப்போட்டேன். வரும்படி நேரமும் நாளும் குறித்துப் பதில் கடிதம் வந்தது. கல்லூரி வகுப்பை விட்டு வர எனக்கு அந்த நேரம் ஒத்துவரவில்லை.

நான் ஓரளவுக்கு நன்றாகப் படிக்கக்கூடிய பையன். வகுப்பில் நடத்தப்படும் பாடங்களைக் கேட்டே பரீட்சையில் எழுதி விடுவேன். நான் அந்தக் கடிதத்திற்குப் பதில் எழுதினேன். மதியம் 1 மணியில் இருந்து 2 மணி வரை சாப்பாட்டு நேரம். அதனால் சாப்பாட்டைப் பற்றிக் கவலைப்படாமல் நான் அங்கு வந்து விடுகிறேன். நான் மாணவன். வகுப்பைக் கட் அடிக்க விரும்பவில்லை என்று எழுதியதும் அவர்களும் மனம் இரங்கினார்கள்.

மதியம் 1.15 மணிக்கு வியர்க்க விறுவிறுக்க ஏ.ஐ.ஆர். ரேடியோ நிலையத்துக்குச் சென்றேன். அது ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு எதிரில் இருந்தது. 3 அச்சடித்த தாள்களை என் கையில் கொடுத்தார்கள். அதில் நிறைய கிராமத்து வசனம். பட்டினத்தான் வசனம், ராஜபார்ட் சொற்பொழிவு இருந்தது. அதைக் கொடுத்து என்னை மைக் முன் நின்று பேசச் சொன்னார்கள். நான் பேசினேன். என்னை வினோதமாகப் பார்த்தார்கள். அதுதான் நான் அகில இந்திய வானொலியில் நுழையும் கடைசி நாள் என்று நினைத்தேன். ஆச்சரியம்.

அவர்கள் என்னை மீண்டும் அழைத்தார்கள். முதல் சம்பளமாக பத்து ரூபாய்க்கான செக் கிடைத்தது. ரேடியோ நாடகங்களில் நல்ல பெயர் வாங்கினேன். இவ்வாறு இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர் தனது அனுபவங்களைப் பற்றி பேசியுள்ளார்.