Shanthi Williams: திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்கள் வில்லி வேடத்தில் நடிக்கும் நடிகை சாந்தி வில்லியம்ஸ் ஒரு காலத்தில் வீட்டை விட்டு எந்த வாசலில் வருகிறாரோ அந்த வாசலில் ஒரு கார் ரெடியாக இருக்கும். அந்த வகையில் மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்தவர், அதன் பிறகு ஒரு சில ஆண்டுகளில் நான்கு குழந்தைகளுடன் கணவரை இழந்து நடுத்தெருவுக்கு வந்த சோகம் குறித்து அவர் பேட்டியில் கூறியுள்ளார்.
நடிகை சாந்தி வில்லியம்ஸ் 12 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிவிட்டார். அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்தார். பெரும்பாலும் குணச்சித்திர கேரக்டர்களிலும் அம்மா கேரக்டரிலும் நடித்தார்.
திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் சாந்தி வில்லியம்ஸ் நடித்துள்ளார். குறிப்பாக பாண்டியன் ஸ்டோர் தொடரில் பார்வதி என்ற கேரக்டரில் சற்று வில்லத்தனமாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ராதிகாவின் வாணி ராணி தொடரில் அங்கயற்கண்ணி என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.
தற்போது சாந்தி வில்லியம்ஸ் புது வசந்தம் உள்ளிட்ட ஒரு சில சீரியல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை சாந்தி பேட்டி ஒன்றில் கூறியபோது தனது கணவர் வில்லியம்ஸ் ஒரு பிரபலமான ஒளிப்பதிவாளர் என்றும் மலையாள திரை உலகில் மோகன்லால் உள்பட பலருடைய படங்களுக்கு அவர் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்றும் தெரிவித்தார்.
ஒரு சில சொந்த படங்கள் எடுத்ததன் காரணமாகவும் ஆடம்பரமான கார்கள் வாங்கி செலவு செய்ததன் காரணமாகவும் ஒரு கட்டத்தில் கடன் அதிகமாகிவிட்டது என்றும் அதன் பிறகு தாங்கள் குடியிருந்த கேகே நகர் வீட்டை விற்று விட்டதாகவும் தெரிவித்தார். இன்றைக்கு 100 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த வீட்டை இழந்து நான்கு பிள்ளைகளுடன் நடுத்தெருவில் நின்றேன் என்றும் கணவரும் ஒரு கட்டத்தில் இறந்துவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு தனது வளர்ப்பு அம்மா தனது வளையலை அடகு வைத்து தனக்கும் தன்னுடைய குழந்தைகளுக்கும் ஒரு சிறிய வீட்டை ஏற்பாடு செய்து தந்தார் என்றும் அங்கிருந்து நான் மீண்டது தான் மிகப்பெரிய போராட்டம் என்றும் தெரிவித்தார்.
முதலில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்த பிறகு வில்லி உள்பட எந்த கேரக்டர் கிடைத்தாலும் குழந்தைகளுக்காக நடித்ததாகவும் தற்போது நான் ஓரளவு நல்ல வசதியுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
நாங்கள் நன்றாக வாழ்ந்த போது எங்களை சுற்றி ஏகப்பட்ட சினிமா நட்சத்திரங்கள் வந்தார்கள். ஆனால் நாங்கள் வசதியற்ற நிலையில் இருந்தபோது ஒருவரும் வந்து எங்களுக்கு உதவி செய்யவில்லை. ரஜினி சார் ஒருவர் தான் எங்களுக்கு அவ்வப்போது உதவி செய்தார் என்று கூறினார். சாந்தி வில்லியம்ஸின் கணவர் வில்லியம்ஸ் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் சென்னையில் திரைப்பட வாய்ப்பு தேடி வந்த போது ஒரே அறையில் தங்கி இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு வாசலில் எந்த பக்கம் வந்தாலும் நான்கு கார்கள் தயாராக இருக்குமளவிற்கு ஆடம்பரமாக வாழ்ந்த சாந்தி வில்லியம்ஸ் அதன் பிறகு வீழ்ச்சி அடைந்தாலும் தற்போது அவர் மீண்டும் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.