தமிழ் சினிமாவின் சிறந்த திரைப்படங்களை மொத்தமாக பட்டியல் போட்டால் நிச்சயம் அதில் 16 வயதினிலே படத்திற்கு ஒரு முக்கிய இடம் நிச்சயம் உண்டு. பாரதிராஜா இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
அந்த சமயத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் ’16 வயதினிலே’ படத்தில் இணைந்ததே அந்த சமயத்தில் மிகப் பெரும் எதிர்பார்ப்பை படத்தின் மீது உருவாக்கி இருந்தது. தொடர்ந்து திரைப்படமும் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பையும் பெற்றிருந்தது. செந்தூரப்பூவே பாடல் தொடங்கி ஆட்டுக்குட்டி என இளையராஜா இசையில் உருவாகி இருந்த அனைத்து பாடல்களும் பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டடித்திருந்தது.
அதே போல, ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் கமல்ஹாசன், 16 வயதினிலே திரைப்படத்தில் சப்பாணி என்ற அப்பாவி கதாபாத்திரம் ஏற்று மிகவும் அற்புதமாக நடித்திருந்தார். மறுபக்கம், ரஜினிகாந்த் வில்லனாக இந்த திரைப்படத்தில் நடிக்க அவரது வில்லத்தனமும் பலரையும் வெகுவாக கவர்ந்திருந்தது. மேலும் கால்நடை மருத்துவராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சத்யஜித்தும் அதிக பாராட்டுகளை பெற்றிருந்தார்.
மயிலு என்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டையைக் கிளப்பி இருந்த நடிகை ஸ்ரீதேவி மீது அனைவருக்கு வரும் காதலை சுற்றி தான் 16 வயதினிலே படம் நகரும். தனது முதல் படத்தையே மிகவும் அற்புதமாக பாரதிராஜா உருவாக்கி இருந்தார். மேலும், இந்த படத்தில் பாடியதாக முன்னணி பாடகி ஜானகிக்கு தேசிய விருது கிடைத்திருந்தது. அதே போல, கமல் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் ஃபிலிம்பேர் விருதுகளை வென்றிருந்தனர். இளையராஜா, கமல்ஹாசன் மற்றும் ஜானகி ஆகியோருக்கு தமிழக அரசின் விருதுகளும் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கமல், ரஜினி மற்றும் ஸ்ரீதேவி என சிறந்த நடிப்பு சிகரங்கள் இந்த படத்தில் இணைவதற்கு முன்பாக வேறு சிலரை தான் நடிக்க வைக்க பாரதிராஜா திட்டம் போட்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றது. முதலில் கமல் கதாபாத்திரத்தில் சிவகுமார் மற்றும் நாகேஷ் ஆகியோரை ஒப்பந்தம் செய்ய பாரதிராஜா திட்டம் போட்டதாக சொல்லப்படுகிறது. சில காரணங்களால் அந்த திட்டங்கள் கைவிடப்பட, பின்னர் கமல் மற்றும் ரஜினி ஆகியோர் ஒப்பந்தம் ஆகினர்.
ஹீரோக்களை தேர்வு செய்வதற்கு முன்பாக மயிலு என்ற கதாபாத்திரத்தில் முதலில் ரோஜா ரமணி என்ற நடிகையை தான் பாரதிராஜா நடிக்க வைக்கலாம் என நினைத்திருந்தார். ஆனால், பாரதிராஜாவின் முதல் படம் என்ற சூழலில், ரோஜா ரமணி என அதிக அறிமுகம் இல்லாத ஆட்கள் அதிகம் இருந்தால் படம் எப்படி அதிகம் மக்களை சென்றடையும் என்றும் பாரதிராஜாவின் நண்பர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.
இதன் பின்னர் தான், நடிகை ஸ்ரீதேவியை பாரதிராஜா ஒப்பந்தம் செய்திருந்தார். மயிலு என்ற கதாபாத்திரம், ஸ்ரீதேவியின் திரை பயணத்தில் மிக முக்கியமான கதாபாத்திரமாகவும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.