தமிழ் சினிமாவின் தொண்ணூறுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்பா. தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த ரம்பா, உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு தவிர மலையாளம், ஹிந்தி, கன்னடம் என மொத்தம் 8 மொழிகளில் நடிகையாக வலம் வந்த ரம்பா, கார்த்திக்குடன் இணைந்து நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமில்லாமல், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார் ரம்பா.
காதலா காதலா, மின்சாரக்கண்ணா உள்ளிட்ட சில திரைப்படங்களில் காமெடி கலந்த கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தி இருந்த ரம்பா, கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து விட்டு கனடாவில் செட்டிலாகி விட்டார். மேலும் இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் ஆகியோர் உள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்ட ரம்பா, சில ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக தலை காட்டி இருந்தார்.
இந்த நிலையில், நினைத்தேன் வந்தாய் திரைப்படத்தின் போது நடந்த சம்பவம் குறித்து படத்தின் இயக்குனர் கே. செல்வபாரதி பேட்டி ஒன்றில் பேசியுள்ள விஷயம் அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய், தேவயானி, ரம்பா, மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த திரைப்படம் நினைத்தேன் வந்தாய். இந்த திரைப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.
இதனிடையே, நினைத்தேன் வந்தாய் படப்பிடிப்பின் போது நடந்த சம்பவம் பற்றி படத்தின் இயக்குனர் செல்வபாரதி சில கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார். “படப்பிடிப்பின் போது ஒரு இயக்குனராக என்னை நினைக்காமல், தெலுங்கு படத்தின் படப்பிடிப்புக்கு என்னிடம் சொல்லாமல் சென்று விட்டார். ரம்பாவின் காஸ்ட்யூம்களை மட்டும் வாங்கி வைக்கும் படி நான் சொல்லிவிட்டேன். இப்போது வண்ண நிலவே பாடலிலும் சில காட்சிகள் படமாக்கப்படவில்லை.
மீண்டும் ரம்பாவை நடிப்பதற்காக அழைக்க வேண்டுமா என யோசித்து பின்னர் என்னை அவர் மதிக்கவில்லை என்பதால் வேண்டாம் என முடிவு செய்தேன். பின்னர் டான்சரை வைத்து அந்த காட்சிகளை எடுத்தேன். வண்ண நிலவே பாடலில் இருக்கும் ரம்பாவின் 46 ஷாட்களில் நடித்தது டூப் ஆர்ட்டிஸ்ட் தான். அது ரம்பாவே கிடையாது. முகம் தெரியும் ஷாட்களில் வருவது மட்டும் தான் ரம்பா. மற்ற அனைத்தும் டூப் தான். அந்த அளவுக்கு எனக்கு அவர் மீது கோபம் இருந்தது.
இந்த விஷயம் ரம்பாவுக்கு தெரியாது. படம் முடிந்து Preview காட்சி போட, இந்த பாடல் திரையில் வந்த பின்னர் ரம்பா மற்றும் அவரது குடும்பத்தினர் பாதியிலேயே கோபத்துடன் எழுந்து சென்று விட்டனர்” என இயக்குனர் கே. செல்வபாரதி தெரிவித்துள்ளார். பலரும் அந்த பாடல் முழுக்க வருவது ரம்பா தான் என நினைத்த சூழலில், அது டூப் ஆர்ட்டிஸ்ட் என படத்தின் இயக்குனரே உண்மையை போட்டு உடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.