தமிழ் சினிமாவில் தான் இயக்குனராக அறிமுகமான குறுகிய காலத்தில் தனக்கென ஒரு அரியணையை உருவாக்கிக் கொண்டவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ‘மாநகரம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் பெற்ற லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக பிரபல நடிகர் கார்த்தியை வைத்து ‘கைதி’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைய, மூன்றாவது படத்திலேயே தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பு லோகேஷுக்கு கிடைத்தது.
இதனையும் கச்சிதமாக அவர் பயன்படுத்திக் கொண்ட சூழலில் அடுத்த படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோரை வைத்து ‘விக்ரம்’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் கடந்த ஆண்டின் அதிக கலெக்ஷன் அள்ளிய தமிழ் திரைப்படமாகவும் அமைந்திருந்தது. இப்படியே அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், சமீபத்தில் விஜய்யை வைத்து ‘லியோ’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
இந்த திரைப்படமும் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி பெரிய வெற்றி பெற, ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் லியோ திரைப்படத்தை உற்று கவனித்தது. தான் இயக்கிய 5 படங்களில் கமல்ஹாசன், விஜய், கார்த்தி என மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளத்தை இயக்கியதுடன் அடுத்ததாக ரஜினிகாந்த நடிக்க உள்ள திரைப்படத்தையும் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளது கூடுதல் தகவல்.
அது மட்டுமில்லாமல் LCU என்று தனக்கென ஒரு பிராண்டையும் உருவாக்கிக் கொண்டார் லோகேஷ். தான் இயக்கிய படங்களான கைதி, விக்ரம் மற்றும் லியோ ஆகிய திரைப்படங்கள் LCU-வில் இணைந்துள்ளதால் விஜய், கார்த்தி, கமல்ஹாசன் ஆகியோரை ஒரே படத்தில் காணும் வாய்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக உள்ளது. இது ஒரு புறம் இருக்க, விக்ரம் படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் சூர்யா வில்லனாக தோன்றியிருந்தார். இதனால் விஜய், கமலுக்கு வில்லனாக சூர்யா களமிறங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான இயக்கத்தில் லோகேஷ் எப்போது இறங்குவார் என அறிய தற்போதிலிருந்து ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் திரைப்படத்திற்கு முன்பாக அவர் இயக்கிய திரைப்படம், திரையரங்கில் ரிலீசானது தொடர்பான தகவலை பார்க்கலாம். 2016 ஆம் ஆண்டு திரை அரங்கில் வெளியான தமிழ் திரைப்படம் ‘அவியல்’. ஆந்தாலஜி கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ், அல்போன்ஸ் புத்திரன் உள்ளிட்ட ஐந்து இயக்குனர்கள் இயக்கியிருந்தனர்.
நிவின் பாலி, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த சூழலில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இதனை தயாரித்திருந்தார். அவியல் படம், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிகரமாக செல்லவில்லை என்றாலும், லோகேஷ் கனகராஜ் இயக்கி திரை அரங்கில் தோன்றிய முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.