திரை உலகில் அறிமுகமாகும் நடிகைகளுக்கு ரஜினி, கமலுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் என்றும் குறைந்தபட்சம் ரஜினி, கமல் படத்தில் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்ற கொள்கையுடன் தான் திரையுலகில் அறிமுகமாவார்கள்.
ஆனால் பிரபல நடிகை ஒருவருக்கு ரஜினி, கமலுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும், அதில் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. கமல் படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிய அவர், ரஜினி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அதன்பின் திடீரென வாங்கிய அட்வான்ஸ் திருப்பி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த நடிகை தான் ஜெயஸ்ரீ.
நடிகை ஜெயஸ்ரீ சென்னையைச் சேர்ந்தவர். சிறு வயதில் படிப்பில் மிகவும் ஆர்வம் காட்டியவர். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வெளிநாடு செல்ல வேண்டும் என்ற கொள்கையுடன் இருந்தார். ஆனால் அவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவுடன் அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவரது பெற்றோர்கள் விரும்பினர். பெற்றவர்கள் ஆசையை ஒப்புக்கொண்ட அவர் திருமணத்திற்கும் தயாரானார்.
அப்போதுதான் ‘தென்றலே என்னை தொடு’ என்ற படத்திற்காக புதுமுக நடிகை தேடிக் கொண்டிருந்த இயக்குனர் ஸ்ரீதர் தற்செயலாக ஜெயஸ்ரீ தாயாரைப் பார்த்து உங்கள் மகளை நான் எனது படத்தில் ஹீரோயின் ஆக்க விரும்புகிறேன், உங்களுக்கு சம்மதமா என்று கேட்டுள்ளார். ஆரம்பத்தில் சம்மதம் இல்லை என்று ஜெயஸ்ரீ தாயார் கூறிய நிலையில் சினிமா என்பது ஒரு மிகப்பெரிய புகழ் தரக்கூடிய துறை, பணமும் அதிகம் கிடைக்கும் சில ஆண்டுகள் நடித்துவிட்டு அதன் பின் நீங்கள் திருமணம் செய்து வைக்கலாம் என்று ஜெயஸ்ரீ தாயாரை சமாதானம் செய்துள்ளார்.
அதன் பிறகுதான் ‘தென்றலே என்னை தொடு’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். சினிமா அறிவு கொஞ்சம் கூட இல்லாத ஜெயஸ்ரீக்கு இந்த படத்தில் மோகன் ஜோடியாக நடிக்க உள்ளார் என்பது தெரியாது. மேலும் மோகன் யார் என்பதே அவருக்கு தெரியாதாம்.
ஆனால் படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் இளம் பெண்கள் மற்றும் கல்லூரி பெண்கள் மோகனை பார்க்க ஆர்வத்துடன் வருவதும் அவர்களுடன் ஆட்டோகிராப் எடுத்துக் கொள்வதை பார்த்த ஜெயஸ்ரீ இவ்வளவு பெரிய நடிகருடனா நாம் நடிக்க போகிறோம் என்று பிரமித்தார்.
ஜெயஸ்ரீயின் முதல் படம் சூப்பர் ஹிட் ஆகியதோடு, தமிழ் திரை உலகில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று ‘தென்றலே என்னை தொடு’. இந்த படத்தின் பாடல்கள் இன்றளவும் பிரபலமாக உள்ளது. முதல் படம் பெற்ற வெற்றி காரணமாக அவருக்கு தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.
20 வருடங்களுக்கும் மேல் மோதிய கமல் – ரஜினி படங்கள்.. மாறி மாறி கிடைத்த வெற்றி..!
1985ஆம் ஆண்டு நான்கு படங்களிலும் 1986ஆம் ஆண்டு 9 படங்களிலும் நடித்தார். இந்த நிலையில்தான் சுமார் 30 படங்கள் நடித்து முடித்த போது அமெரிக்க மாப்பிள்ளை வரன் வந்தபோது அவரது பெற்றோர் இனியும் சினிமாவில் தொடர வேண்டாம் திருமணம் செய்து கொள் என்று கூறினர். இதனை அடுத்து பெற்றோரின் வார்த்தையை மறுபடியும் ஒப்புக்கொண்டார்.
அப்போதுதான் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் புன்னகை மன்னன் என்ற படத்தில் ரேகா கேரக்டரில் நடிக்க ஜெயஸ்ரீக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த படத்தில் கமலுடன் உதட்டு முத்தக்காட்சி இருப்பதை அறிந்ததும் அவர் நடிக்க மறுத்துவிட்டார். கே.பாலச்சந்தர் எவ்வளவோ கூறியும் தன்னால் இந்த கேரக்டரில் நடிக்க முடியாது என்று கூறிய பின்னர் தான் அவர் ரேகாவை இந்த படத்தில் நடிக்க வைத்தார்.
அதேபோல் குரு சிஷ்யன் திரைப்படத்தில் கௌதமி கேரக்டரில் நடிப்பதற்கு முதலில் தேர்வு செய்யப்பட்டவர் ஜெயஸ்ரீ தான். ஆனால் திருமண தேதி முடிவு செய்யப்பட்டதை அடுத்து குரு சிஷ்யன் படத்தில் நடிக்க முடியாது என்று கூறிய ஜெயஸ்ரீ வாங்கிய அட்வான்ஸை தயாரிப்பாளரிடம் திருப்பி கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. பிற்காலத்தில் ரஜினி எப்போதாவது ஜெயஸ்ரீயை பார்த்தால் எனது படத்தில் எனக்கு ஜோடியாகவே நடிக்க மறுத்த ஒரே நடிகை இவர்தான் என்று ஜெயஸ்ரீயை கிண்டல் செய்ததாகவும் கூறப்பட்டது. அப்போதுதான் ரஜினியுடன் ஒரு படத்தில் நடித்திருக்கலாம் என்று வருத்தப்பட்டதாக ஜெயஸ்ரீ பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
நடிகை ஜெயஸ்ரீ அமெரிக்காவில் வங்கி அதிகாரியான சந்திரசேகர் என்பவரை கடந்த 1988ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் அவர் முற்றிலும் திரையுலகிலிருந்து விலகினார். அவருக்கு இரண்டு மகன்கள் உண்டு. இருவரும் தற்போது கல்லூரியில் படித்து வருகிறார்கள்.
கணவர் வேலைக்கு சென்றதும் குழந்தைகள் பள்ளிக்கு சென்றதும் தான் தனிமையை உணர்ந்ததை அடுத்து ஜெயஸ்ரீ கம்ப்யூட்டர் பயிற்சி பெற்று, தற்போது ஒரு அமெரிக்க நிறுவனத்தில் முக்கிய பதவியில் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.
அவ்வப்போது சென்னை வரும் போது ஒரு சில திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கும். அதில் ஒருசில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவ்வாறு கிடைத்த வாய்ப்புகளில் ஒன்று தான் விசுவின் ‘மணல் கயிறு 2’. விசுவின் ‘திருமதி ஒரு வெகுமதி’ படம் அவருக்கு மிகவும் பிடித்த படம் என்பதால் விசு கொடுத்த வாய்ப்பை தட்ட முடியாமல் அந்த படத்தில் நடித்தார். எனினும் தன்னால் தொடர்ந்து நடிக்க முடியாது என்றும் தனக்கு வரும் வாய்ப்புகளை அவர் தட்டி கழித்ததாகத்தான் கூறப்படுகிறது.
தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய ராதிகாவின் முன்னாள் கணவர்.. பிரதாப் போத்தனின் அறியாத பக்கங்கள்..!
ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகைகளில் ஒருவர் ஜெயஸ்ரீ. கமல், ரஜினி உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதில் நடிக்க மறுத்த ஒரே நடிகை ஜெயஸ்ரீதான்.