பழம்பெரும் இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர் 1976ல் தன் வாழ்க்கையில் மறக்கமுடியாத படமாக பத்ரகாளி படத்தை எடுத்தார். இந்தப் படத்தை எடுக்கும்போது ஏற்பட்ட அனுபவங்களை இவ்வாறு பகிர்ந்துள்ளார்.
என்னுடைய வாழ்க்கையில் பல காரணங்களுக்காக மறக்க முடியாத படம் பத்ரகாளி. பெயரை வைக்கும்போதே பலரும் பயமுறுத்தினார்கள். பத்ரகாளி பயங்கரி என்றார்கள். என் தாய் ஒருபோதும் எனக்குத் துரோகம் செய்ய மாட்டாள். சேலத்தைச் சேர்ந்த மகிரிஷி என்பவர் எழுதிய குறுநாவல். நான் திரைக்கதை அமைத்து சிறுகதையை பெருங்கதையாக மாற்றினேன்.
படத்தின் துவக்கத்திலேயே ஒரு பெரிய முடிச்சைப் போட்டேன். கோர்ட் சிவகுமாருக்கும், ராணிசந்திராவுக்கும் விவாகரத்து கொடுத்துவிடுகிறது. சிவகுமாரின் மாமனாராக மேஜர் சுந்தரராஜன் நடித்திருந்தார். இருவருக்கும் அதில் உடன்பாடு இல்லை என்றாலும் ஏன் அந்த விவாகரத்து நடந்தது. அதுவே ஒரு புரியாத புதிர்தானே… படத்தோட இடைவேளையில் ஒரு முடிச்சு போடுவேன்.
பத்ரகாளி பிராமணக்குடும்பத்தைப் பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட படம். நான் புரசைவாக்கத்தில் குடியிருந்தபோது அது பிராமணத்தெரு. அதனால் அவர்களது பழக்க வழக்கங்களை எல்லாம் நன்கு தெரிந்து வைத்திருந்தேன். ராணி சந்திரா மலையாளி. காலேஜ் என்பதை கோலேஜ் என்று தான் சொல்ல வேண்டும் என்று அடம்பிடிப்பார். சிவகுமார் கொங்கு நாட்டுத் தமிழ்மகன். இயற்கையிலேயே கொங்குநாட்டுத் தமிழ் உச்சரிப்புடன் பேசுவார்.
இதில் விதிவிலக்கு மேஜர் சுந்தரராஜன் தான். எனது அபிமான நடிகர் என்பதால் எல்லாப் படங்களிலும் அவர் வரும்படி பார்த்துக் கொள்வேன். மனோரமா இன்ஸ்பெக்டராக வந்து அசத்துவார்.
படம் தொடங்கியதுமே வியாபாரம் சக்கை போடு போட்டது. அதிலும் இது சின்ன பட்ஜெட் படம். புதுக்கதாநாயகி. ஒரு ஏரியாவை வாங்க நாலைந்து பேர் போட்டி போட்டனர்.
ஒருநாள் எனக்கு பேரதிர்ச்சி தரும் செய்தி வந்தது. ராணி சந்திரா இறந்துவிட்டாள் என்று, பம்பாயில் கலைநிகழ்ச்சிக்காக சென்றவர் வரும் வழியில் அவர் கிளம்பிய விமானம் பம்பாய் கடற்கரையில் வெடித்துச் சிதறிவிட்டது என்ற தகவல் வந்தது. அப்போது அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் என்று சொல்வதைத் தவிர வேறொன்றும் எனக்குத் தோன்றவில்லை.
ராணிசந்திரா அதுவரை நடித்த சீன்களை மாற்றி மாற்றிப் போட்டால் பாதி படம் வரை தேறும். மீதி காட்சிகளை டூப் போட்டு எடுப்பது என்று முடிவு செய்தோம். என் திறமைக்கு ஒரு சவாலான படமாக அமைந்தது.
படத்தில் ஒரு பாடல்காட்சியில் அவள் இல்லாமல் அவள் இருப்பதைப் போல நம்ப வைத்து எடுத்தேன். அதே போல் கிளைமாக்ஸ் காட்சியில் துணிந்து டூப் போட்டு அதுவும் குளோசப்பில் நிற்க வைத்து எடுத்தேன். என்னை பத்ரகாளி கைவிடவில்லை. திட்டமிட்டுச் செய்தேன். வெற்றியும் கண்டேன்.