90களில் பிரபல நாயகி.. தமிழில் வினோதினி, கன்னடத்தில் ஸ்வேதா.. புது சினிமா வாய்ப்பு வந்தும் மறுத்த காரணம்..

By Bala Siva

Published:

சினிமாவில் பொதுவாக குழந்தை நட்சத்திரமாக இருந்து அதில் கிடைக்கும் புகழ் மூலம் சிறந்த நடிகர்களாகவோ, நடிகைகளாகவோ மாறுவார்கள். அந்த வகையில், குழந்தை நட்சத்திரமாக நடித்து ஹீரோயனாக மாறியவர்களில் முக்கியமானவர் நடிகை வினோதினி. இவர் கன்னடத்தில் தனது பெயரை ஸ்வேதா என்று மாற்றிக் கொண்டு பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை வினோதினி சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்தார். விசு இயக்கிய ’மணல் கயிறு’ என்ற திரைப்படத்தில் தான் ‘பேபி லக்ஷ்மி’ என்ற கேரக்டரில் அவர் அறிமுகமானார். அந்த படத்தில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்ததை எடுத்து அவருக்கு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக புதிய சகாப்தம், மண்ணுக்குள் வைரம், நாயகன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இதனை அடுத்து 1991 ஆம் ஆண்டு ’சித்திரை பூக்கள்’ என்ற திரைப்படத்தின் மூலம் அவர் நாயகியாக அறிமுகமானார். கண்மணி சுப்பு இயக்கத்தில் உருவான இந்த படத்தில் அவர் பாரதி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு நல்லதொரு வரவேற்பும் கிடைத்திருந்தது.

இதன் பின்னர் ஹீரோயினாக ஒரு சில திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். ஆத்தா உன் கோயிலிலே, வண்ண வண்ண பூக்கள், அபிராமி போன்ற படங்களில் நடித்த அவர் அதன் பின்னர் மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்தார்.

vinodhini1

ஒரு கட்டத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் அவர் ஹீரோவுக்கு தங்கையாக, அக்காவாக, அண்ணி போன்ற கேரக்டரில் பல திரைப்படங்களில் நடித்தார். ஆத்மா, என் ராஜாங்கம், சின்ன மேடம், தொண்டன், வீட்டுக்குள்ளே திருவிழா, ரட்சகன், தடயம், உனக்காக எல்லாம் உனக்காக உள்ளிட்ட பல திரைப்படங்களில் வினோதினி நடித்தார்.

ஆனால் கடந்த 2000-த்திற்கு பிறகு அவர் நடிப்பதை திடீரென குறைத்துக் கொண்டார். 2001-க்கு பிறகு அவர் மொத்தமே ஆறு படங்கள் தான் நடித்தார். அதில் கடைசியாக ’கால்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் வினோதினி என்ற பெயரில் நடித்தவர், கன்னடத்தில் தனது பெயரை ஸ்வேதா என மாற்றி கொண்டு ஒருசில திரைப்படங்களில் நடித்தார்.

திரைப்படத்தில் மட்டுமின்றி அவர் சின்னத்திரையிலும் தனது நடிப்பு முத்திரையை பதித்தார். முதன்முதலாக அவர் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ’உடல் பொருள் ஆனந்தி’ என்ற சீரியலில் சிறப்பாக நடித்தார். அவரது கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றிருந்தது.

இதனை அடுத்து கண்ணாடி கதவுகள், விரோதி, பெண் பொம்மைகள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். அதன் பிறகு அவர் சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி என்ற சீரியலில் நடித்த பிறகுதான் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் குடும்பம், ஆனந்த பவன், அகல்விளக்குகள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த வினோதினி ஜெயா டிவியில் ஒளிபரப்பான ’விடாது சிரிப்பு’ சன் டிவியில் ஒளிபரப்பான ’சொர்க்கம்’ ஜீ தமிழ் ஒளிபரப்பான ’சொல்வதெல்லாம் உண்மை’ ஆகியவற்றில் நடித்தார்.

vinodhini2

இதன் பின்னர் வாணி ராணி, அக்னி நட்சத்திரம், ரோஜா, அன்பே வா, கண்ணான கண்ணே உள்பட பல சீரியல்கள் நடித்தார். தற்போது கூட அவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் என்ற சீரியலில் உமா மகேஸ்வரி என்ற அசத்தலான கேரக்டரில் நடித்து வருகிறார்.

தற்போது திரையுலகில் அவர் நடிக்கவில்லை என்றாலும் சின்னத்திரையில் இன்னும் பிரபல நடிகையாக தான் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் கூட அவருக்கு திரையுலகில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆனால் இப்போதைக்கு தனக்கு சின்னத்திரை போதும் என்ற முடிவை அவர் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.