திருவண்ணாமலை என்றதும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது தீபத்திருநாள் தான். மலை உச்சியில் கொப்பரை கொண்டு தீபம் ஏற்றுவது மிக முக்கியமான நிகழ்ச்சி. அங்கு தீபம் ஏற்றியதும் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம்.
திருக்கார்த்திகை தீபத்திருநாள் 26.11.2023 அன்று வருகிறது. அன்று மதியம் 2.41 மணிக்குக் கார்த்திகை நட்சத்திரம் துவங்குகிறது. அன்று பௌர்ணமி திதியும் மாலை 3.58 மணிக்குத் துவங்குகிறது.
அதனால் தீபம் ஏற்றும்போது பௌர்ணமியும், கார்த்திகையும் ஒன்றாக வருகிறது. இது பரணி இரவில் இருந்து ஆரம்பித்து கார்த்திகை நட்சத்திரம் மாலை வரை நாம் கடைபிடிக்க வேண்டிய விரதம்.
கார்த்திகை மாதம் முழுவதுமே நாம் விளக்கேற்ற வேண்டும். அதில் திருக்கார்த்திகைக்கு முதல் நாள் ஏற்றுவது பரணி தீபம். 2ம் நாள் கார்த்திகை தீபம். 3ம் நாள் பாஞ்சராத்ர தீபம். இந்த 3 நாள்களுமே விளக்கேற்றுவது உத்தமம்.
எல்லா நாள்களுமே விளக்கேற்றுவது நல்லது தான். இருளை அகற்றுவது தான் ஒளி. நம்மைச் சுற்றிலும் பாசிடிவ் எனர்ஜியைக் கொண்டு வந்து சேர்க்கும். ஞானம் மற்றும் விஞ்ஞானத்தின் அடிப்படையில் இந்த நாளில் விளக்கேற்றுவது சிறந்த யோகத்தைத் தரும். இந்த மாதத்தில் தியானப்பயிற்சியைத் துவங்கினால் மென்மேலும் சிறப்பு சேர்க்கும்.
நமக்கு 2 வகையாக காலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அவை உத்தராயண காலம். தட்சணாயண காலம். இயற்கையின் அடிப்படையில் இப்படித்தான் பிரித்துள்ளார்கள். சூரியன் தென்கிழக்கில் இருந்து வடக்கிழக்கு நோக்கி சூரியன் நகர்கின்ற காலம் உத்தராயண காலம்.
தை மாதம் துவங்கி ஆனி வரை உள்ள 6 மாதங்கள் இந்தக் காலங்கள். வடகிழக்கில் துவங்கி தென்கிழக்கில் சூரியன் பயணிக்கும் 6 மாதங்கள். ஆடி முதல் மார்கழி வரை உள்ள 6 மாதங்கள். இவற்றில் ஞானம், யோகம் என 2 ஆகப் பிரிப்பர். ஞானத்தை நோக்கிப் போக வேண்டும் எனில் உத்தராயண காலமும், யோகத்தை நோக்கிப் போக வேண்டும் எனில் தட்சணாயண காலமும் நமக்குக் கைகொடுக்கும்.
இவற்றில் மார்கழி மாதம் தேவர்களின் விடியற்காலைப் பொழுது. அதாவது அவர்களின் முன் இரவு. பொழுது புலர்வதற்கான காலம் என்றால் அது கார்த்திகை மாதம்.
இந்த மாதத்தில் நாம் நல்ல விளக்கொளியால் நம்மைச் சுற்றி உள்ள தீய சக்திகளை எல்லாம் நீக்க வேண்டும். அப்போது நமக்கு நல்ல சக்திகள் அனைத்தும் நம்மைச் சுற்றிக்கொள்ளும். அப்போது நாம் தியானமோ, யோகமோ எதைக் கற்றுக்கொள்ளத் துவங்கினாலும் அது மிகவும் எளிமையாக நமக்கு கைகொடுக்கும்.
அதனால் தான் கார்த்திகை மாதம் 30 நாள்களும் வீடு முழுக்க விளக்கேற்றச் சொன்னார்கள். அது நல்ல சக்திகளைக் கொண்டு வந்து நமக்கு சேர்க்கும். மனதில் இறைவனை உருவநிலையில் பார்ப்பதை விட ஜோதி ரூபமாகப் பார்க்கும்போது தான் நாம் யோகநிலையில் வளர்ச்சி அடைந்து ஞானநிலையைப் பெற்றிருக்கிறோம் என்று அர்த்தம். சிவபெருமான் அண்ணாமலையாக எழுந்தருளி காட்சி தந்த அற்புதமான நாள் தான் திருக்கார்த்திகை.