கடந்த சில தினங்களாகவே இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனக்கலக்கத்தில் தான் இருந்து வருகின்றனர். இதற்கு காரணம், இந்திய அணி உலக கோப்பையை தவற விட்டது தான்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நடந்த ஐம்பது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் முன்னேறி இருந்தது.
அரையிறுதி போட்டி உட்பட 10 போட்டிகளில் இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் இறுதி போட்டிக்கு முன்னேற்றம் கண்டிருந்தது. இதனால் இந்திய அணி நிச்சயம் உலக கோப்பையை கைப்பற்றும் என்ற நம்பிக்கையுடன் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
ஆனால் போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. எளிதான இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி, ஆரம்பத்தில் சில விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய ரசிகர்கள் புத்துணர்ச்சி அடைந்தனர். ஆனாலும், ஆஸ்திரேலிய வீரர் ஹெட் இந்தியாவுக்கு தலைவலியாக அமைய, ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி உலக கோப்பையை கைப்பற்றி இருந்தது.
இதனால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடும் மன வேதனையிலும், ஏமாற்றமும் அடைந்து போயினர். இது போக பல பிரபலங்கள் கூட இந்திய அணியின் எதிர்பாராத தோல்வியை குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை குறிப்பிட்டு வந்தனர்.
அந்த வகையில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இந்திய தோல்வி குறித்து X தளத்தில் வெளியிட்ட பதிவும், அதற்கு இயக்குனர் அமீர் கொடுத்த பதிலடியும் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.
புதுப்பேட்டை, 7 ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், NGK உட்பட பல்வேறு திரைப்படங்களை இயக்கியவர் செல்வராகவன். இயக்குனரான இவர், பீஸ்ட், சாணி காயிதம், மார்க் ஆண்டனி என நிறைய திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது X தளத்தில் பதிவுகளையும் பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில், இந்திய அணி தோல்வி குறித்து X தளத்தில் பதிவிட்ட செல்வராகவன், “நேற்று கிரிக்கெட்டில் தோற்றபிறகு அழுது கொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு புரியவில்லை. தந்தை அழுது அவர்கள் பார்த்தது இல்லை. பாவம். அது கிரிக்கெட்டில் தோற்றதற்கு வரும் கண்ணீர் அல்ல. என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடியவில்லை. அதில் வரும் வலியை சொல்ல இயலாது. நெஞ்சம் உடைந்து சிதறியது” என வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார்.
இணையவாசிகள் மத்தியில் செல்வராகவன் பதிவு கவனம் பெற, இதற்கு இயக்குனர் அமீர் பதிலடி கொடுக்கும் வகையிலான கருத்து ஒன்றையும் பகிர்ந்துள்ளார். “கண்ணீர் விட்டு அழ தோற்றது தேசம் அல்ல. கிரிக்கெட் வாரியம் தான்” என கிரிக்கெட் என்பதை விளையாட்டாக பார்க்க வேண்டும் என்ற தொனியில் குறிப்பிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்ததை பற்றி கவலைப்படுவதை விட நாம் பேசவும், கவனிக்க வேண்டிய விஷயங்களும் இன்னும் உள்ளது என அமீர் கருத்துக்கு ஆதரவாக பலரும் தங்களின் கருத்துக்களைக் குறிப்பிட்டு வருகின்றனர்.