செல்போன் வருவதற்கு முன் பிரபலங்கள் பொதுவெளிகளில் கூடும் போது ரசிகர்களும், பொதுமக்களும் அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்குவது வழக்கம். ஆனால் தற்போது செல்போன் வந்து விட்ட காரணத்தால் ஆட்டோகிராப் வாங்குவது அரிதாகிப் போனது. பிரபலங்கள் எங்கு சென்றாலும் அவர்களிடம் செல்பி எடுக்கும் வழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் பிரபலங்கள் பொது வெளிகளில் வருவதற்கே தயக்கம் காட்டி வருகின்றனர். இல்லையெனில் மாறுவேடங்களில் வந்து செல்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் வருகை தந்த நடிகர் சிவக்குமார் தன்னுடன் செல்பி எடுக்க முயன்றவரின் செல்போனை தட்டி விட்ட சம்பவம் வைரலாகியது. வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம், அதற்காக இப்படியா செய்வது என்று சிவக்குமாரை கழுவிக் கழுவி ஊற்றினர். மேலும் மீம்ஸ்களிலும் கலாய்க்கத் தொடங்கினர். அதன் பின் இந்த சம்பவம் ஓய்ந்தது.
தற்போது இதேபோன்று மேலும் ஒரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது. பாலிவுட் நடிகர் நானா படேகர் பங்கேற்ற சினிமா ஷுட்டிங்கில் சக நடிகரை அடிப்பது போன்ற காட்சியில் ரசிகர் ஒருவர் வந்ததால் அவரை அடித்து விட்டார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக தற்போது நானா படேகர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
வாயார வாழ்த்திய சூப்பர் ஸ்டார் : 100% கப் நமக்குத்தான்
தன்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “நான் ஒருவரை அடிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் உலாவி வருகிறது. படத்தின் ஒரு காட்சிக்காக ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒருவர் உள்ளே வந்தார். நடிகரென நினைத்து விட்டு சீனில் இருந்தபடி அடித்துவிட்டு அவரைப் புறப்படச் சொன்னேன்.
பின்னர் தான் தெரிந்தது அவர் எங்கள் குழுவைச் சேர்ந்தவர் இல்லையென்பது. உடனே நான் அவரை அழைக்க முற்பட்டபோது அதற்குள் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். அவரின் நண்பர் யாரோ ஒருவர் தான் வீடியோ எடுத்திருக்கக் கூடும்.
மற்றபடி என்னோடு புகைப்பட எடுக்க வரும் யாரையும் நான் எதுவும் சொன்னதில்லை. தவறுதலாக இச்சம்பவம் நடந்து விட்டது. தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். இனி இதுபோல் இந்தத் தவறைச் செய்ய மாட்டேன். “ என்று அந்தப் பதிவில் விளக்கம் கொடுத்திருக்கிறார் நானா படகேர்.
பிரபல இந்தி நடிகரான நானா படேகர் இராணுவ அதிகாரியாகவும் பணியாற்றினார். தமிழில் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம், பா. ரஞ்சித் இயக்கிய சூப்பர் ஸ்டாரின் காலா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.