கடைசிவரை கொலைகாரன் யாரென யூகிக்க முடியாத அதிபயங்கர கதை… அப்பவே இப்படி ஒரு படமா?

By Sankar Velu

Published:

மறைந்த பழம்பெரும் இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர் ஒரு துப்பறியும் படத்தை எடுத்தார். மிகவும் சுவாரசியமான இந்தப்படத்தில் விறுவிறுப்புக்குப் பஞ்சமே இல்லை. இப்போது பார்த்தாலும் நமக்குள் அந்தப் பயம் தொற்றிக்கொள்ளும்.

அப்பவே என்னமா எடுத்திருக்காங்கன்னு நாம் பாராட்டுவோம். அப்படிப்பட்ட ஒரு படம் தான் அதே கண்கள். படத்தை இயக்கியவர் திருலோகசந்தர். என்ன சொல்றார்னு பார்க்கலாமா…

எனக்குள் துப்பறியும் கதை மேல் அலாதி ஆர்வம் உண்டு. அதை வைத்து யோசித்த போது ஒரு பொறி தோன்றியது. அதுதான் அதே கண்கள். அந்தப் படத்தின் சிறப்பம்சமே கடைசி வரை அவிழாத முடிச்சு. கதைகள் எழுதும்போதே திரைக்கதையாகத் தான் யோசிப்பேன். என் மனத்திரையில் முதல் ஷோ ஓடிவிடும்.

ACT
ACT

இந்தப்படத்தின் முக்கிய அம்சம் கடைசி வரை கொலைகாரன் யார் என்று தெரியக்கூடாது. மக்களின் மனதில் சின்னச் சந்தேகம் கூட வரக்கூடாது. அவர்கள் கண்ணெதிரே அவன் உலா வர வேண்டும். ஆனால் அவர்கள் கண்டுபிடிக்கக்கூடாது. கடினமான முயற்சி தான். எதை மறைத்தாலும் அவன் கண்களின் கூர்மையை மறைக்க முடியாது.

அதிலிருந்து வெளிப்படும் கோபக்கனலை மறைக்கக்கூடாது. அந்தக் கண்களைப் பார்க்கும்போது அவன் வெறி தெரிய வேண்டும். கடைசியில் அந்தக் கண்களை வைத்துத் தான் அவன் கண்டுபிடிக்கப்படுகிறான்.

அதே கண்கள் தனித்து நின்று கண்ட போது அவன் கண்டறியப்படுகிறான். கடைசி கிளைமாக்சில் இதற்கு 2 யுக்திகளை நாங்கள் கையாண்டோம்.

முற்றிலும் புதியவரான ஒரு புதுமுகத்தை இந்த முக்கிய கதாபாத்திரத்தில் படம் முழுக்க கண் முன்னே உலாவ விட்டு இருந்தோம். அப்படிப்பட்ட சரியான நபரைத் தேர்ந்தெடுத்தோம். அந்த இளைஞர் பெயர் பழனிச்சாமி. தபால் துறையில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார்.

அந்தக் கண்களைப் பார்க்கும்போது பயங்கரம் தெரிய வேண்டும். என் கண்முன் வேறொரு உப நடிகரின் முகத்தில் அந்தக் கண்களைப் பார்த்தது என் நினைவுக்கு வந்தது. அதுவரை நான் கண்ட சிறுத்தைப்புலியின் மஞ்சள், சிவப்பு கலந்த கொடூரமான கண்கள் அவை.

குளோஸ் அப்பில் காட்டியபோது அந்த நடிகரின் கண்களை மட்டும் தான் முகமூடியின் இடையே காட்டினேன். அவர் சிங்களத்தில் இருந்து வந்த ஒரு தமிழர். கவிஞர். ஆனால் பரமசாது. அப்படி ஒரு கண்கள் அவருக்கு அமைந்து இருந்தது. அவர் பெயர் சிலோன் விஜயேந்திரன்.

1967ல் ஏவிஎம் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில் ரவிச்சந்திரன், காஞ்சனா உள்பட பலர் நடித்துள்ளனர். இது அந்தக் காலகட்டத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.