முன்னணி நடிகையாக இருந்த ஒரு காலத்தில் இருந்த லட்சுமியை பற்றி ரசிகர்கள் பலருக்கும் தெரியும். ஆனால் அவரது அம்மாவும் நடிகை என்பது பலரும் அறியாத உண்மை. லட்சுமியின் தாயாரும், நடிகை ஐஸ்வர்யாவின் பாட்டியுமான குமாரி ருக்மணி பல படங்களில் நாயகியாக நடித்து பெயர் எடுத்துள்ளார்.
சிவாஜி கணேசன் நடித்த ’கப்பலோட்டிய தமிழன்’ என்ற திரைப்படம் 1961 ஆம் ஆண்டு வெளியானது. சுதந்திர போராட்ட வீரர் வஉ சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு கதையம்சம் கொண்ட இந்த படத்தில் வஉ சிதம்பரனார் கேரக்டரில் சிவாஜி கணேசன் நடித்த நிலையில், அவருக்கு ஜோடியாக குமாரி ருக்மணி, மீனாட்சி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதுடன் குமாரி ருக்மணி நடிப்பிற்கு அதிக பாராட்டுக்கள் கிடைத்திருந்தது.

நடிகை ருக்மணி குழந்தை நட்சத்திரமாகவே பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக கடந்த 1935 ஆம் ஆண்டு வெளியான ’ஹரிச்சந்திரா’ திரைப்படத்தில் லோகிதாசன் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். இதனை அடுத்து அவர் 1945 ஆம் ஆண்டு வெளியான டி ஆர் மகாலிங்கம் நடித்த ‘ஸ்ரீ வள்ளி’ என்ற படத்தில் ’நடித்திருப்பார்.
அதேபோல் பஞ்சகவல்லி என்ற திரைப்படத்தில் கிருஷ்ணராக நடித்திருந்த போதிலும் இவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் புகழைப் பெற்றுக் கொடுத்தது என்றால் அது கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் தான். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு குமாரி ருக்மணிக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.
மணியோசை, இதயத்தில் நீ, கடவுளை கண்டேன் உள்பட பல படங்கள் நடித்தார். சிவாஜி கணேசன் நடித்த ’பார் மகளே பார்’ என்ற திரைப்படத்தில் முத்துராமன் அம்மாவாக நடித்திருப்பார் குமாரி ருக்மணி. இதனை அடுத்து பூம்புகார், கர்ணன், நவராத்திரி, வெண்ணிற ஆடை, இதயக்கமலம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

அதேபோல் சிவாஜி கணேசன் நடித்த விளையாட்டு பிள்ளை படத்தில் சிவாஜி கணேசன் ஜோடியாக நடித்த பத்மினிக்கு அம்மாவாக நடித்திருப்பார். மேலும் எம்ஜி ஆர் நடித்த தலைவன், ஜெமினி கணேசன் நடித்த அவளுக்கென்று ஒரு மனம், சிவாஜி கணேசன் நடித்த மூன்று தெய்வங்கள், காரைக்கால் அம்மையார் உள்பட பல படங்களில் நடித்தார்.
நீண்ட இடைவெளிக்கு பின் கடந்த 2000 ஆண்டு அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற திரைப்படத்தில் நடிகை குமாரி ருக்மணி, மணிவண்ணன் அம்மாவாக நடித்திருப்பார். இந்த படம் தான் அவருடைய கடைசி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகை பொருத்தவரை மூன்று தலைமுறை நடிகைகள் என்றால் அது குமாரி ருக்மணி, நடிகை லட்சுமி மற்றும் நடிகை ஐஸ்வர்யா என்று சொல்லலாம். மூவரும் பல பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
