”கண்கலங்கி தொண்டை அடைக்குது..” ஜிகர்தண்டா டபுள் X குறித்து உருகிய எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ்

By John A

Published:

தமிழ் சினிமாவில் நெடுநாளைக்குப் பிறகு இப்படி ஒரு படத்தை ரசிகர்கள் தூக்கிக் கொண்டாடி வருகிறார்கள். தீபாவளி விருந்தாக ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ஜிகர்தண்டா திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதனுடன் போட்டி போட்ட கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

ஆனால் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் X தமிழ் சினிமாவிற்கு புது தெம்பூட்டுவதாக அமைந்துள்ளது. இப்படியும் கதைக்களங்களை எடுக்க முடியுமா என்று கார்த்திக் சுப்புராஜ் எழுத்திலும், மேக்கிங்கிலும் மிரட்டியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையும் படத்தை வேறொரு தளத்தில் எடுத்துச் செல்வதாக படத்தைப் பார்த்த பலர் கொண்டாடி வரும் வேளையில் எஸ்.ஜே.சூர்யாவும், ராகவா லாரன்ஸ்சும் படம் குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர்.

ராகவா லாரன்ஸ் பேசுகையில், “இதுவரை பேய்ப்படங்களில் நடித்து வந்த என்னை முதன்முதலில் கமர்ஷியல் நாயகனாக மாற்றியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இது எஸ்.ஜே. சூர்யா படமோ, என் படமோ அல்ல. முழுக்க முழுக்க கார்த்திக் சுப்புராஜையே இந்த வெற்றி சேரும். மேக்கப்பே இல்லாமல் நடித்த என் ஒளிப்பதிவாளருக்கு நன்றி. கே. பாலசந்தர் சாருக்கு அடுத்து என்னுடைய இரண்டாவது குருவாக கார்த்திக் சுப்புராஜ்தான்“ என்று பேசினார்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விமர்சனம்!.. இதுதான் கார்த்திக் சுப்புராஜ் படம்!..

எஸ்.ஜே.சூர்யா பேசுகையில், “ கார்த்திக் சுப்புராஜ் எப்பொழுதும் கூறுவார் நாம் பேசக் கூடாது. நாம் எடுக்கும் படங்கள் தான் பேச வேண்டும் என்று. அது இப்போது நடந்துள்ளது. இடைவேளைக்குப் பிறகு படம் கண்கலங்க வைத்து தொண்டையை அடைக்க வைக்கிறது. ஒரு தமிழனின் படம் இன்று உலகம் முழுக்க கொண்டாட வைக்கிறது.

Jigarthand 1

இந்த மண்ணும், மக்களும் எவ்வளவு முக்கியம் என்பதை சினிமா மூலம் காட்டி அதன் பவரை நிரூபித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இந்தப் படம் ரசிகர்களுக்கு இரட்டை தீபாவளி விருந்தாக அமையும் எனவும்“ அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஜிகர்தண்டா முதல் பாகத்தில் சித்தார்த், பாபிசிம்ஹாவை வைத்து திரைப்படம் இயக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்தப் படம் பாபி சிம்ஹாவிற்கு சிறந்த துணை நடிக்கருக்கான தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஜிகர்தண்டா டபுள் X படமும் விருதுகளை அள்ளிக் குவிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.