சபரிமலை சர்ச்சை, இரண்டாவது திருமணம்.. ரோஜாவுக்கு முன்பே அமைச்சரான நடிகையின் பரபர வாழ்க்கை

By Bala Siva

Published:

நடிகை ரோஜா தற்போது அமைச்சராக இருக்கும் நிலையில், இவருக்கு எல்லாம் முன்னோடியாக நடிகையாகி பின்னர் அமைச்சரான ஒரு பிரபலத்தை பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் ரோஜா. இவர் பின்னர் ஆந்திர மாநில தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் அங்கே அமைச்சராகவும் உள்ளார்.

அந்த வகையில் இவருக்கு முன்பாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நடிகை ஜெயமாலாவும் அமைச்சராக இருந்துள்ளார். ஆறு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரருடன் பிறந்த ஜெயமாலா சிறு வயதிலேயே திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தார். இவர் பல கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதே வேளையில் சில தமிழ் திரைப்படங்களில் மட்டும் தான் நடித்துள்ளார்.

கடந்த 1974 ஆம் ஆண்டு கன்னட திரைப்படத்தில் அறிமுகமான இவர் முதல் படம் பெற்ற வெற்றியின் காரணமாக பல கன்னட படங்களில் நடித்தார். தொடர்ந்து மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்களில் இவர் நடித்துள்ளார்.

தமிழ் திரை உலகில் நடிகை ஜெயமாலா ’ஒரு கொடியில் இரு மலர்கள்’ என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு ’ஜம்பு’ ’பாமா ருக்மணி’  ’அன்று முதல் இன்று வரை’ ’கல் தூண்’ ’கண் சிவந்தால் மண் சிவக்கும்’ ‘படிக்காத பண்ணையார்’ ’நம்பினார் கெடுவதில்லை’ உள்பட ஒரு சில படங்களில் நடித்தார்.
‘நம்பினார் கெடுவதில்லை’ என்ற படத்தின் படப்பிடிப்பின் போது தான் நடிகை ஜெயமாலா சபரிமலைக்கு சென்று ஐயப்பன் சிலையை தொட்டதாக இவர் பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. 10 முதல் 50 வயதுடைய பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை என்ற நிலையில் ஜெயமாலா எப்படி சபரிமலைக்கு சென்றார் என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் சபரிமலை தலைமை பூசாரி ஜெயமாலாவின் கருத்து கற்பனையானது என்று கூறி நிராகரித்திருந்தார். நடிகை ஜெயமாலா பிரபல கன்னட நடிகர் டைகர் பிரபாகர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு சௌந்தர்யா என்ற மகள் இருக்கிறார். ஆனால் ஒரு சில ஆண்டுகளில் கணவரை பிரிந்த ஜெயமாலா ஒளிப்பதிவாளர் ராமச்சந்திரா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

நடிகை ஜெயமாலா அரசியலிலும் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த இவர் கர்நாடக மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.