தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து பின் சமூக செயல்பாட்டாளராக வலம் வருபவர் நடிகர் தாமு. கில்லி படத்தில் ஒட்டேரி நரியாக வந்து அனைவரையும் சிரிக்க வைத்த தாமு சிறந்த மிமிக்ரி கலைஞரும் கூட.
சினிமாவிற்குள் நுழைவதற்கு முன் மிமிக்ரி ஆர்டிஸ்டாக தன் வாழ்க்கையை தொடங்கிய இவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்திரின் வானமே எல்லை படத்தின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். பலகுரல் மன்னனாகத் திகழ்ந்த நடிகர் தாமு 100-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடியனாக நடித்துப் புகழ் பெற்றார்.
குறிப்பாக அஜீத், விஜய், பிரசாந்த் என முன்னணி நடிகர்களின் பெரும்பாலான படங்களில் நடித்திருப்பார். மேலும் இயக்குநர் சரணின் அதிக படங்களில் தாமு இடம் பெற்றிருப்பார். ஒரு கட்டத்தில் நடிப்புக்கு குட்பை சொல்லவிட்டு அப்துல்கலாம் மேல் கொண்ட பற்றால் அவரிடம் உதவியாளராக இருந்தார். தொடர்ந்து அவருடைய கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு சமூக செயல்பாட்டாளராக மாறினார்.
கல்வியின் முக்கியத்துவத்தையும், மாணவர்கள் நலனிலும் தொடர்ந்து அக்கறை காட்டிவரும் தாமு சமீப காலமாக அவர் பங்கேற்று பேசும் நிகழ்ச்சிகளில் மாணவர்களை அழ வைக்காமல் விடுவதில்லை. தனது வசீகர பேச்சால் மாணவர்களைக் கட்டிப் போட்ட தாமு சில நேரங்களில் எமோஷனலாகப் பேசி திடீரென பல மாணவர்களை அழ வைத்து விடுகிறார். பெற்றோர் குறித்தும் அவர்கள் படும் கஷ்டங்களைக் குறித்து தாமு பேசும்போது மாணவர்கள் தங்களை அறியாமல் கண்ணீர் விடுகின்றனர்.
பல நேரங்களில் இவர் பேசும்போது அழும் வீடியோக்களில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் நேற்றும் சேலத்தில் நடந்த மாண்புமிகு மாணவிகள் திட்ட அறிமுக விழாவில் அதே போல் பேச மீண்டும் மாணவிகள் அழுத சம்பவம் அரங்கேறியுள்ளது.
நம்ம முதல்வர் ஸ்டாலினா இது : சினிமாவுல இப்படி ஒரு பஞ்ச் வசனமா?
இவ்வாறு இவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் மாணவ, மாணவிகள் அழுவது தொடர்கதையாகி வரும் நிலையில் குழந்தைகள் உரிமைகள் செயற்பாட்டாளர் தேவநேயன் சோஷியல் மீடியாவில் தாமுவுக்கு கண்டனம் தெரிவித்து பதிவு செய்துள்ளார்.
அதில், “நடிகர் தாமு அவர்களே குழந்தைகளை கொடுமைப்படுத்தாதீங்க, இவை குழந்தைகளின் உரிமைகளுக்கும் மாண்புக்கும் எதிரானது மற்றும் அவர்களின் நலனுக்கும் தீங்கு பயக்கும். குழந்தைகளை அழ வைப்பது என்பது அவர்களை துன்புறுத்தும் குற்றமாகும். இது சட்டப்படி தவறு என்றும் குழந்தைகளை அறிவுத் தளத்தில் உணர்ச்சிப் பூர்வமாக அணுகாமல் அறிவுத் தளத்தில் அணுகுமாறும் அதில் தெரிவித்துள்ளார்.