முள்ளும் மலரும் கிளைமாக்ஸ் காட்சி.. உணர்ச்சிவசப்பட்டு பாலச்சந்தர் ரஜினியிடம் சொன்னது என்ன தெரியுமா..?

By Sathish

Published:

தமிழ் சினிமா பொருத்தவரையில் ரஜினிக்கு ஒரு கல்ட் படம் என்று சொன்னால் அது 1978 ஆம் ஆண்டு இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் வெளி வந்த திரைப்படம் தான் “முள்ளும் மலரும்”. இப்படத்தில் ரஜினிகாந்த் உட்பட படாபட் ஜெயலட்சுமி, ஷோபா, சரத் பாபு ஆகியோர் நடித்திருப்பர். இப்படத்திற்கு இளையராஜா இசை மேலும் வலு கொடுத்திருக்கும். மிகவும் எளிமையான எதார்த்த வாழ்வியலோடு பயணிக்கக்கூடிய எளிய கதையாக இருக்கும்.

மொத்தம் நான்கு கதாபாத்திரங்கள் அதனை சுற்றியே கதைகளத்தை செதுக்கியிருப்பார் இயக்குனர் மகேந்திரன். இதில் தங்கை மேல் பாசம் கொண்ட ஒரு ஈகோ நிறைந்த முரட்டு அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ரஜினிகாந்த். அதுவரை இரண்டு மூன்று படங்கள் மட்டுமே நடித்திருந்த ரஜினிகாந்த் முள்ளும் மலரும் திரைப்படத்தின் மூலம் அவரை சினிமா உலகின் உச்ச நட்சத்திர பட்டியலில் ரசிகர்கள் இடம் பிடிக்கச் செய்தனர்.

அந்த அளவிற்கு அப்படத்தில் அவரது ஸ்கிரீன் பிரசன்ஸ் யாராலயும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பட்டைய கிளப்பி விட்டார் என்றே சொல்லலாம். காரணம் அவரின் நடிப்புத் திறனுக்கு மிகப்பெரிய அரங்கம் அமைத்துக் கொடுத்தது அந்தத் திரைப்படம் தான். அளவு கடந்த கோபம், அண்ணன் தங்கை பாசம், ஒற்றை கையினால் ஏற்படும் இயலாமை என்று நடிப்பில் புது சிகரத்தை தொட்டார் ரஜினி.

தனது கையை இழந்த நிலையில் தங்கையை தட்டிக் கொடுத்து என்னடா ஆச்சு..? ஒன்னும் இல்லடா ஒன்னும் இல்ல என்று காளி சொல்லும் காட்சி நடிப்பில் அவரின் மற்றொரு பரிமாணத்தை எடுத்துக்காட்டும் வண்ணமாக அமைந்திருக்கும். இப்படத்தின் கிளைமாக்ஸில் அண்ணனின் எதிர்ப்பை மீறி சரத்பாபுவை திருமணம் செய்து கொள்வார் தங்கை. சிறிது தூரம் போன பின்பு ரஜினியை நோக்கி ஓடி வந்து அவரை கட்டிப்பிடித்து அழுவார்.

அதுவரை தலை கவிழ்ந்து நின்ற ரஜினி தன் தங்கை வந்ததும் ஊர் மக்களை பார்த்து, ‘வள்ளி டா.. என் தங்கச்சி என்னை விட்டு எங்கேயும் போக மாட்டா’ என மாஸாக டயலாக் டெலிவரி செய்து திரையரங்கை அதிர வைத்திருப்பார். இப்படத்தை முழுவதுமாக பார்த்த இயக்குனர் பாலச்சந்தர், “உன்னை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியதற்கு எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கு” என்று பாராட்டி நெகிழ்ந்திருக்கிறார். அதனை தொடர்ந்து வந்த பல படங்கள் வெற்றி படங்களாக வரிசை கட்டின. ரஜினி வணிக சினிமாவின் ராஜாவாக அங்கிருந்துதான் தொடங்கி இருக்கிறார்.