இன்று நடிகர் விஜய்யை நாம் தளபதி என்று அடைமொழி கொடுத்து கொண்டாடி வரும் வேளையில் ஆரம்ப கால படங்களில் இளைய தளபதி என்றே குறிப்பிட்டு வந்தனர். தலைவா படத்திற்குப் பின் இளைய தளபதியானது மாறி தளபதி என்று ஆனது. பின்னர் தளபதி விஜய் என்பதே அடுத்தடுத்த படங்களில் நிரந்தரமானது.
ஆனால் ஆரம்பத்தில் இந்தப் பட்டத்தை யாருக்கு கொடுத்தாங்க தெரியுமா? பருத்தி வீரனில் சித்தப்புவாக நடித்து பெயர் பெற்ற நடிகர் சரவணன் தான் இந்த அடைமொழிக்குச் சொந்தக் காரராக இருந்தார். அண்மையில் பேட்டி ஒன்றில் இது குறித்து அவர் கூறுகையில், நான் ஆரம்ப காலத்தில் நான் நடித்த படங்கள் எல்லாமே தோல்விப் படங்களாகவே அமைந்தது. மேலும் கதைகளும் ஒரே மாதிரியாக இருந்தது.
இளைய தளபதி பட்டம்
மேலும் அவர் கூறுகையில் சென்னையில் ஏற்கனவே ஒரு தளபதி (மு.க.ஸ்டாலின்) இருக்கிறார். சேலத்தில் எனக்கு இளைய தளபதி என்ற பட்டத்தை திமுகவின் வீரபாண்டி ஆறுமுகம் வைத்ததாகச் சொன்னார்.
மேலும் தான் நடித்த அடுத்தடுத்த படங்களில் இந்த அடைமொழியை டைட்டில் கார்டில் போட்டதாகவும் ஆனால் தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குறைந்த நிலையிலும், விஜய் அந்தக் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்த நிலையிலும் பட்டம் அவருக்கே நிலையானது என்றும் கூறினார். இந்தப் பட்டம் குறித்து நான் இதுவரை எங்கும் பேசியதில்லை எனவும் துளியளவு கூட பொறாமை இல்லை என்றும் நடிகர் சரவணன் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.
என்னை விட விஜய்க்குத்தான் அந்தப் பட்டம் மிகப் பொருத்தமானது, விஜய் மிகப் பெரிய உயரத்தைத் தொட்டுவிட்டார் என்றும் சரவணன் கூறியுள்ளார். ஏற்கனவே அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என்ற சோசியல் மீடியாவில் அவ்வப்போது விவாதமாகும் நிலையில் தற்போது சரவணின் இந்தப் பேட்டியானது இணையதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
இதனிடையே லியோ வெற்றி விழாவில் பேசிய நடிகர் விஜய் சூப்பர் ஸ்டார்ன்னா அது ஒருத்தர் தான், உலகநாயகன் ஒருத்தர் தான் என்றும் மக்களாகிய நீங்கள் ஆணையிட்டதைச் செய்யும் தளபதிதான் நான் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.