2 மொழிகளில் 3 தேசிய விருது.. குறுகிய காலத்திலேயே தென் இந்திய சினிமாவில் தடம் பதித்த நாயகி

By Bala Siva

Published:

ஆந்திராவை சேர்ந்த பிரபல நடிகை தான் சாரதா. சிறு வயதிலேயே நடிப்பில் நாட்டம் கொண்ட காரணத்தினால் முறையாக நடிப்பு பயிற்சி, நடன பயிற்சி, நாட்டிய பயிற்சியையும் அவர் பெற்றிருந்தார். ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் பிறந்த இவருடைய பெற்றோர் விவசாய குடும்பத்தினர் ஆவார்கள்.

ஆந்திராவில் பிறந்தாலும் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை அவர் சென்னையில் தான் முடித்தார். இந்த நிலையில் சாரதா நடன பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் போது தான் அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. அவருடைய குடும்பத்தினர் நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் தான் மகள் நடிப்பதற்கும் சம்மதம் தெரிவித்தனர்.

சாரதா முதல் முறையாக  தெலுங்கு படம் ஒன்றில் அறிமுகமானார். ‘கன்யாசுல்கம்’ என்ற தெலுங்கு படத்தில் என் டி ராமராவ், சாவித்திரி, சவுகார் ஜானகி உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் சாரதா அறிமுகமானார். 1955 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு அவர் பல தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். 1963 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்த குங்குமம் திரைப்படத்தில் தமிழில் அறிமுகமானார். இதனையடுத்து துளசி மாடம், அருணகிரிநாதர், வாழ்க்கை வாழ்வதற்கே ஆகிய படங்களில் அவர் நடித்த நிலையில் துலாபாரம் என்ற திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது

முழுக்க முழுக்க சோக காட்சிகள் அடங்கிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தின் மூலம் தான் அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அவர் ஊர்வசி சாரதா என்று அழைக்கப்பட்டார்.

இதையடுத்து சிவாஜி கணேசன் நடித்த ஞான ஒளி என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். எம்ஜிஆருடன் சாரதா இணைந்து நடித்துள்ள ஒரே திரைப்படம் நினைத்ததை முடிப்பவன். எம்.ஜி.ஆரின் மாற்றுத்திறனாளி சகோதரியாக இந்த படத்தில் நடித்திருப்பார். மேலும் இந்த படத்தில் கதைக்கு முக்க்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்திலும் சாரதா நடித்திருந்தார்.

இதையடுத்து சிவாஜி கணேசன் நடித்த என்னை போல் ஒருவன், அவள் தந்த உறவு, சக்கரவர்த்தி ஆகிய படங்களில் நடித்தார். அதன் பின்னர் ரஜினிகாந்த், சத்யராஜ் நடித்த ’மிஸ்டர் பாரத்’ என்ற படத்தில்  ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தார். பின்னர் தமிழில் நீண்ட காலமாக நடிக்காமல் இருந்த அவர், 1998 ஆம் ஆண்டு அந்தபுரம் என்ற படத்தில் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் அவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். துலாபாரம் மட்டுமின்றி மேலும் ஒரு மலையாளம் மற்றும் தெலுங்கு படத்திற்காகவும் மொத்தம் மூன்று முறை தேசிய விருதினை சாரதா பெற்றுள்ளார். அது மட்டுமின்றி தமிழக அரசின் கலைமாமணி விருது, கேரளா அரசின் சிறந்த விருதுகள், நந்தி விருதுகள் உட்பட பல  விருதுகளை பெற்றுள்ளார்.

நடிகை சாரதா கடந்த 1972 ஆம் ஆண்டு சலாம் என்பவரை திருமணம் செய்த நிலையில் 1984 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து விட்டார். நடிகையாக மட்டுமின்றி சாரதா, அரசியலிலும் ஈடுபட்டார். சந்திரபாபு நாயுடு அவர்களின் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து சில ஆண்டுகள் அரசியலில் பணியாற்றினார்.