அக்கா மாதிரி சினிமாவில் தடம் பதித்த தங்கை.. 3 தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடிக்க காரணம்..

By Bala Siva

Published:

தமிழ் திரை உலகின் பழம்பெரும் நடிகை பண்டரிபாய் என்பதும் அவர் எம்ஜிஆர், சிவாஜி உட்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்துள்ளார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே. எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி உட்பட மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்த பண்டரிபாயின் சகோதரியும் ஒரு நடிகை என்பது பலரும் அறியாத தகவல். அந்த வகையில் நடிகையும் பண்டரிபாயின் சகோதரியுமான மைனாவதி பற்றி தற்போது பார்க்கலாம்.

பண்டரிபாயை விட 5 வயது குறைவான நடிகை மைனாவதி, சிறுவயதிலேயே சகோதரியை போல நடிப்பில் நாட்டம் கொண்டிருந்தார். இவர் கடந்த 1953 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்த ’கண்கள்’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் பண்டரிபாயும் நடித்திருந்தார்.

‘கண்கள்’ வெற்றிக்கு பின் ‘பொன்வயல்’ ’நல்ல வீடு’ ’குலதெய்வம்’ ’ஆரவல்லி’ ’மாலையிட்ட மங்கை’ ’பொம்மை கல்யாணம்’ ’அன்பு எங்கே’ ’நான் வளர்த்த தங்கை’  ’நாலு வேலி நிலம்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களில் நடித்தார். மேலும் இவர் நூற்றுக்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ளார்.

கல்யாண் குமார், உதயகுமார், சிவாஜிகணேசன், ராஜ்குமார் என முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி பல தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். ’அம்மா’  ’சுமங்கலி’ உட்பட பல சீரியல்களில் இவரது நடிப்பு அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது. தமிழ், கன்னடம் மட்டுமின்றி ஒரே ஒரு பெங்காலி படத்தில் நடிகை மைனாவதி நடித்துள்ளார்.

தமிழில் இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. அதிலும் குறிப்பாக இரட்டை இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு அவரை தொடர்ந்து தனது படங்களில் பயன்படுத்தி வந்தனர். 1960 ஆம் ஆண்டு வெளியான குறவஞ்சி என்ற திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் மைனாவதி நடித்திருந்தார். இந்த படத்தில் மைனாவதியின் கேரக்டருக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்தது.

பிரபல வில்லன் நடிகர் மனோகர் முக்கிய கேரக்டரில் நடித்த வண்ணக்கிளி என்ற திரைப்படத்தில் நடிகை மைனாவதி, சரஸ்வதி என்ற கேரக்டரில் அசத்தி இருப்பார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேம் நசீர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை மைனாவதி டாக்டர் ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். நடிகை மைனாவதி கடந்த 2012 ஆம் ஆண்டு  திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் சிகிச்சையின் பலன் இன்றி உயிரிழந்தார்.  தமிழ் மற்றும் கன்னட திரை உலகில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய மைனாவதி நடிப்பை இன்றும் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்.