மங்கம்மா சபதம் என்றதும் 80ஸ் குட்டீஸ்களுக்கு உலகநாயகன் கமல் நினைவு வந்து விடும். இது அந்தப் படம் அல்ல. அதையும் தாண்டி பின்னோக்கிய படம். என்எஸ்.கிருஷ்ணன் நடித்து அசத்திய படம் மங்கம்மா சபதம். 1943ல் ஆச்சார்யாவின் இயக்கத்தில் வெளியான சூப்பர்ஹிட் படம்.
படத்தின் கதையோ சுவாரசியத்திலும் சுவாரசியம். அந்தக் காலத்திலேயே இவ்வளவு சாமர்த்தியமாக அழகான திரைக்கதை வந்துள்ளது. பார்க்கலாமா…
இந்தப் படத்தில் கலைவாணரின் பாத்திரம் செம காமெடியாக இருக்கும். தெருத்திண்ணையில் உட்கார்ந்து கொண்டு அங்கு போறவங்க, வர்றவங்க மேல கல்லை விட்டு எறிவார். அது அவங்க முதுகில போய் விழும். ஆனால் அவங்க திரும்பிப் பார்க்கும் போது திண்ணையில் உள்ள தூணில் ஒன்றுமே தெரியாதது போல அப்பாவியாகத் தாளம் போடுவார். அவங்க இவரா தான் இருக்குமோ என கிட்ட வந்து பார்த்துட்டு நல்ல பிள்ளையா இருக்காரேன்னு போயிடுவாங்க.
அப்படி தான் ஒரு தடவை ஒருவர் மேல் கல் விட்டு எறிய அவரோ அவன் பக்கத்தில் வந்து விடுகிறார். அவன் அப்பவும் ஒண்ணுமே தெரியாதது போல தூணில் தாளம் போடுகிறான். உடனே அவன் கையில் இன்னும் நாலைந்து கற்களை எடுத்துக் கொடுத்து இவ்ளோ நேரம் எப்படிச் செய்தாயோ அதே போல செய் என்று சொல்லி விட்டு கூடவே காசும் கொடுக்கிறார். ஓஹோ இப்படி செஞ்சா சன்மானமும் உண்டு போல என எண்ணி மகிழ்கிறார்.
ஒரு கழைக்கூத்தாடி வர, அவன் மீதும் கற்கள் வீசுகிறார். உடனே அவர் வந்து ஓஹோ வேலை இல்லாதவர் போல என கலைவாணருக்கு வேலை கொடுக்கிறார். கழைக்கூத்தாடியின் மகளைக் காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். தெருவில் வேடிக்கைக் காட்டுகிறான் கழைக்கூத்தாடி. மாங்கொட்டையில் இருந்து மாஞ்செடி வருது என காட்ட தந்திரம் செய்கிறான் கழைக்கூத்தாடி. கலைவாணரோ மக்களுக்கு ஒளித்து வைத்துள்ள மாஞ்செடியையும் எடுத்துக் காட்டுகிறார்.
ஒரு சில கழைக்கூத்தாடிகள் செய்யும் மாயாஜாலங்களை அவை ஒரு ஏமாற்று வேலை என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. காதலியை அடையவும் அவர் பல வழிகளைக் கையாள்கிறார்.
ஒரு சமயம் காதலியின் தந்தை வாசலிலும், மகள் உள்ளேயும் இருக்கின்றனர். இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்துகிறார் என்எஸ்கே. ஒரு மாம்பழம் வேண்டும் என்று தந்தையிடம் சொல்லி விட்டு உள்ளே செல்கிறார். அவரது மகளிடம் முத்தம் கேட்கிறார். அவள் தடுமாறி கூச்சல் போட, என்னம்மா என தந்தை அழைக்க இவனும் பயந்து போய் தந்தையிடம் வந்து மொத்தமா கொடுக்கச் சொல்லுங்கள் என்று சொல்லி விட்டு மீண்டும் உள்ளோ போகிறான். தந்தை தான் கொடுக்கச் சொன்னார் என்கிறான்.
அங்கு மகள் கொடுக்கலாமா என கத்திக் கேட்க, ம்… கொடு… கொடு என்று பதிலளிக்கிறார் தந்தை. காதலியிடம் பார்த்தாயா அப்பவே கொடுக்கச் சொன்னார் என்கிறான். அவளும் சந்தேகித்து மீண்டும் கேட்க, வெளியில் இருக்கும் தந்தை ஆசைப்பட்டுக் கேட்கிறானம்மா… கொடு… கொடு… தப்பில்லே என்கிறார். அவளும் வேண்டா வெறுப்பாக முத்தமிடுகிறாள். இப்படி ரசிக்கும் காட்சிகள் படத்தில் ஏராளம்.