சனீஸ்வர பகவான் எப்போதும் நல்லதை மட்டுமே செய்வார். நம்முடைய கர்மவினைகளின் அதிகாரி அவர்தான். நமக்கு கர்மாப்படி என்ன என்ன தண்டனைகள் கிடைக்க வேண்டுமோ அதை தனது ஏழரை சனிக்காலத்தில் கணக்கு வைத்து கொடுத்து விடுவார். சிலருக்கு இந்த காலங்களில் ஏற்படும் இழப்புகள் ஏற்றுக்கொள்ளவே முடியாத வகையில் இருக்கும். ஆனால் சனி தனது ஏழரை சனிக்காலம் முடிந்த உடன் அனைத்தையும் சரி செய்வார். சிலர் வியாபாரத்தில் இழந்ததையும், குடும்ப ரீதியான ஏற்பட்ட கடும் பிணக்குகளை கூட சரி செய்து விடுவார். இது எல்லாம் நம்ம வாழ்க்கையில் வந்து துன்புறுத்தியதா என ஆச்சரியப்படும் அளவு நொடிப்பொழுதில் நமக்கு காண்பித்து விடுவார். அதனால் அவரை இகழாமல் தொடர்ந்து அவரை வணங்கி வர வேண்டும்.
சனீஸ்வரருக்கு பல பரிகாரத்தலங்கள் உள்ளது குறிப்பாக திருநள்ளாறு சனீஸ்வரரும், குச்சனூர் சனீஸ்வரரும் அனைவருக்கும் தெரியும்.
ஆனால் கையில் வில்லேந்திய வடிவில் பஞ்சம் பசி துயர் போக்கும் சனீஸ்வரர் ஒருவர் உள்ளார். அவர்தான் மாயவரம் வழுவூர் சிவன் கோவிலில் உள்ள சனீஸ்வரர்.
சோழ மன்னன் ஒருவர் இப்பகுதியை அரசாண்டபோது சனிபகவானின் சஞ்சாரம் காரணமாக நாட்டில் கடும் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த மன்னன் சனிபகவானை நோக்கித் தவமிருந்து நாட்டில் பஞ்சம் வராத வரத்தைப் பெற்றார். அவர் வழிபட்ட சனி பகவான், மேகத்தைத் துளைத்து மழைபொழிய வைத்தாராம். அதை நிரூபிக்கும் வகையில் அவர் கையில் வில்லுடன் அற்புதமாக காட்சி தருகிறார்.
அதனால் இவரை வழிபட்டால் நம்முடைய துன்பத்தை பஞ்சத்தை போக்கி செழிப்புடன் நம்மை வாழ வைப்பார் என்பது ஐதீகம். சனீஸ்வரனின் ஏழரைச்சனி காலத்தில் பொருளாதார ரீதியாக நஷ்டத்தை சந்தித்தோர் வில்லேந்திய வடிவில் உள்ள சனீஸ்வரரை வழிபட்டு வாழ்வில் நன்மை பெறலாம்.
மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் எட்டாவது கி. மீ. தூரத்தில் வழுவூர் உள்ளது அங்குள்ள வீரட்டேஸ்வர் கோவிலில் சனீஸ்வரர் உள்ளார்.