நாளை கார்த்திகை 1 ஐயப்பனுக்குரிய விரதம் நாளை ஆரம்பிக்கிறது. ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை வணங்க செல்வார்கள்.
சில வருடங்கள் முன்பு வரை ஐயப்ப பக்தி குறித்து போதிய விழிப்புணர்வு பலருக்கு இல்லை. தமிழ்நாட்டில் ஐயப்ப பக்தியை அளப்பறிய முறையில் பக்தர்களிடம் கொண்டு சேர்த்தவர்கள் மிகப்பெரிய நாடக கலைஞரான நவாப் ராஜமாணிக்கம். இவர்தான் அனைவரிடத்திலும் தனது நாடகங்களின் மூலம் ஐயப்ப பக்தியை வளர்த்தவராவர். மறைந்த முன்னாள் திமுக சபாநாயகர் பிடிஆர் பழனிவேல்ராஜனின் தந்தை பிடி ராஜன் தான் ஐயப்பனின் மீது பக்தி கொண்டவர். தற்போது இருக்கும் ஐயப்பன் சிலை தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டு இவரால் வைக்கப்பட்ட சிலைதான். தமிழக பக்தர்களின் ஐயப்ப வழிபாட்டுக்கு முக்கிய காரணமான மனிதர்களில் இவரும் ஒருவர். அடுத்ததாக திரைப்பட நடிகர் எம்.என் நம்பியார் ஐயப்ப பக்தியை பாமரருக்கும் எடுத்து சொல்லும் விதமாக செயல்பட்டவர். இவரால்தான் ஐயப்ப ஸ்வாமியின் மகிமை பல பாமர பக்தர்களுக்கு தெரிய வந்தது. மாலையணியும் முறை உள்ளிட்டவற்றையும் விரதம் இருக்கும் முறை உள்ளிட்டவற்றையும் மிக தெளிவாக எடுத்துரைத்தவர் இவர்.
ஐய்யப்ப ஸ்வாமிக்கு என சில நியமங்கள் உள்ளன. அதன்படி சுத்தமாக விரதம் இருந்து தரையில் படுத்து அதிகாலை 3மணிக்கு எல்லாம் குளித்து காலை மனமுருக ஐயப்பனை வழிபட்டு மாலையிலும் குளித்து ஐயப்பனை வழிபட்டு வர வேண்டும்.
கன்னிசாமி எனப்படுபவர் முதன் முதலில் செல்பவர்கள் ஆவார் இவர்கள் தகுந்த குருமார்களை தேடி மாலை அணிந்து கொள்ள வேண்டும்.
மாலை அணிந்த உடன் ஒழுக்கத்தை குறைந்த பட்சம் 48 நாட்களுக்காவது கடைபிடிக்க வேண்டும். இன்று பல ஐய்யப்ப சாமிகள் மாலையணிந்தும் கடும் கெட்ட வார்த்தைகள் பேசுவது, மது பாக்கு, புகையிலை போன்றலாகிரி வஸ்து எனப்படும் போதை பொருட்களை பயன்படுத்துவது, சுத்தமில்லாமல் இருப்பது, சரியான நேரத்தில் குளிக்காமல் இருப்பது. இப்படியான செயல்களில் மாலை போட்டும் ஈடுபடுகின்றனர் இது மிகப்பெரும் தவறு.
இப்படி செய்வதால் பெரும் பாவத்துக்கு ஆளாக நேரிடுகிறீர்கள். தீர்க்க முடியாத பாவமாக இது உங்கள் ஆன்மாவின் ஓரத்தில் போய் உட்கார்ந்து கொள்கிறது. உங்கள் ஆன்மா இன்னும் எத்தனை பிறவிகள் வேறு வேறு உடலில் எடுத்தாலும் அந்த உடலுக்கு பல வருட துன்பத்தை அளிக்கிறது. இது பலருக்கு புரிவதில்லை.
நீங்கள் மாலை போட்டுத்தான் விரதம் இருந்துதான் ஐயப்ப பக்தியை வெளிக்காட்ட வேண்டும் என்று அவசியமில்லை. உங்களால் சரியான முறையில் இருக்க முடிந்தால் இருக்கலாம். அதை விட்டு லாகிரி வஸ்து உபயோகிப்பேன், கெட்ட வார்த்தை பேசுவேன் என்று நீங்கள் இருந்தால் மாலை அணியாமல் இருப்பதே உங்களுக்கு நன்மை பயக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.