தமிழ் திரை உலகில் பாரதிராஜா மற்றும் பாலச்சந்தர் ஆகிய இருவரும் மிகச் சிறந்த இயக்குனர்கள். இருவரும் தமிழ் சினிமாவுக்கு கொடுத்த படங்கள் அனைத்தும் பொக்கிஷங்கள் என்றும் சொல்லலாம். தமிழ் திரை உலகம் ராஜா ராணி கதை மற்றும் அம்மா மகன், அப்பா மகன், அண்ணன் தங்கை என்று சென்டிமென்ட் உள்ளேயே இருந்த நிலையில் வித்தியாசமான கதை அம்சங்கள், வெளிப்புற படப்பிடிப்பு, அறிமுக நட்சத்திரங்கள் என தமிழ் சினிமாவின் டிரெண்டையே மாற்றியவர்கள் இந்த இருவர்கள் என்றால் அது மிகையாகாது.
அந்த வகையில் பாலசுந்தர் மற்றும் பாரதிராஜா இயக்கிய திரைப்படங்கள் கடந்த 1980 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் ஒரே நாளில் வெளியானது. இந்த இரண்டு படங்களும் வேலை இல்லா திண்டாட்டம் என்ற ஒரே விஷயத்தை பேசியது தான் மிகப்பெரிய ஆச்சரியம். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, பிரதாப் போத்தன், எஸ்.வி. சேகர், திலீப் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் தான் வறுமையின் நிறம் சிவப்பு.
அபூர்வ ராகங்கள்.. சிக்கலான கதையை சிறப்பாக கையாண்ட கே.பாலச்சந்தர்!

அதேபோல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிழல்கள் என்ற திரைப்படத்தில் ராஜசேகர், ரோகிணி, நிழல்கள் ரவி, சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த இரண்டு படங்களின் முக்கிய ஒற்றுமை என்னவெனில் இரண்டு படங்களும் வேலை இல்லாத திண்டாட்டத்தை பேசி இருக்கும். பாலச்சந்தர் டெல்லியை கதைக்களமாக கொண்டு இருப்பார், பாரதிராஜா சென்னையை கதைக்களமாக மாற்றி இருப்பார்.
இரண்டு படத்தின் ஹீரோகளும் படித்த பட்டதாரிகளாக வேலை கிடைக்காமல் அதிருப்தியில் இருப்பார்கள். ஒவ்வொரு வசனத்தையும் பொட்டில் அறைந்தால் போல் பாலசுந்தர் எழுதியிருப்பார். பாரதிராஜா படம் முழுக்க சோகம், கோபம் ஆகியவை கலந்த வசனத்தை எழுதியிருப்பார். வறுமை நிறம் சிவப்பு மற்றும் நிழல்கள் ஆகிய இரண்டு படத்திலும் காதல் உண்டு டூயட் பாடலும் உண்டு, வறுமை நிறம் சிவப்பு படத்தில் எஸ்வி சேகர் மற்றும் திலிப் ஆகிய இரண்டு நடிகர்களை பாலச்சந்தர் அறிமுகப்படுத்திருப்பார்.
இந்த படத்தில் ஜனகராஜை நடிக்க வைத்திருக்க கூடாது.. தோல்விக்கு பின் பாடம் கற்ற பாரதிராஜா..!

அதேபோல் நிழல்கள் படத்தில் ரவி என்பவரை பாரதிராஜா அறிமுகப்படுத்தியிருந்தார். அவர் இன்றளவும் நிழல்கள் ரவி என்ற பெயரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல் ஒளிப்பதிவாளர்களான ராபர்ட், ராஜசேகரன் என்ற இரட்டையர்களில் ராஜசேகர் என்பவரை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. வறுமையின் நிறம் சிவப்பு படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்தார். இந்த படத்தில் இடம் பெற்ற ஆறு பாடல்களும் சூப்பர் ஹிட்.
குறிப்பாக சிப்பி இருக்குது முத்து இருக்குது என்ற பாடல் இன்றளவும் பிரபலம். அதேபோல் நிழல்கள் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருப்பார். இந்த படத்தில் இடம்பெற்ற பூங்கதவே தாள்திறவாய், இது ஒரு பொன்மாலைப் பொழுது ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகின. மேலும் இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலை எழுதியவர் வைரமுத்து. இந்த பாடல் தான் அவரது முதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
வைரமுத்துவை பாரதிராஜா அறிமுகப்படுத்தியிருந்தார் என்றால் வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் தீபன் சக்கரவர்த்தி என்ற பாடகரை பாலசந்தர் அறிமுகப்படுத்தினார். அவர் பின்னாளில் மிகப்பெரிய பாடகர் ஆனார். வறுமையின் நிறம் சிவப்பு மற்றும் நிழல்கள் ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் வசூல் அளவில் வெற்றி பெற்றது வறுமையின் நிறம் சிவப்பு மட்டும் தான்.
ஒரே டைட்டில், ஒரே கதை.. ஒரே நாளில் தனித்தனியாக விளம்பரம் கொடுத்த எம்ஜிஆர் – சிவாஜி..!
இயக்குனர் பாரதிராஜா நிழல்கள் படத்திற்கு முன் இயக்கிய 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம் ஆகிய அனைத்து படங்கள் வெற்றி பெற்ற நிலையில் அவரது முதல் தோல்வி படமாக நிழல்கள் படம் அமைந்தது. ஆனாலும் அடுத்த படமான அலைகள் ஓய்வதில்லை மூலம் அவர் மீண்டும் வெற்றி இயக்குனர் ஆனார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
