ஒரு ரசிகனின் மனநிலையை உணர்வு ரீதியாக பரவசநிலைக்கு கொண்டு செல்வதற்கும், தன் நிலை மறந்து ரசிக்க வைப்பதும் ஒரு படைப்பாளரின் தலையாய கடமை. “காதலில்லை அது காமமில்லை இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை” என்ற வரிகளுக்கு ஏற்ப in the mood for love படத்தை பக்குவமாக எந்த சூழலிலும் அதன் அழகியல் கெடாத வண்ணம் இயக்கியிருப்பார் wong Kar Wai.
காதல் எப்போது வரும், யார் மீது வரும் என்று எளிதில் சொல்லி விளக்கிட முடியாது. காதல் என்னும் உணர்வு நம் மனதில் கட்டி எழுப்பப்படுகையில் இந்த சமூகத்தை நிலவுகின்ற அனைத்து பிரச்னைகளயும் உடைத்தெறிந்து விட்டு வெளியே வர முயற்சிக்கிறதா? காதலை இதுதான் என்று தீர்ப்பு எழுதி வைத்திட முடியாது.
அவள் எங்கிருந்தாலும் நல்லா இருக்க வேண்டும் என எண்ணுவதும் காதல் தான். இரண்டு நபர்களுக்கிடையே கண்களால் பார்த்து, தூரத்தில் இருந்து ரசித்து வாழ்வதும் காதல் தான். 2000ம் ஆண்டில் வெளிவந்த in the mood for love காவியத்தை உணர்ந்து ரசிப்பதில் தான் சுகமே.
படம் ஆரம்பிக்கும் போதே ‘It is a restless moment. Hongkong 1962’ என்றே தொடங்கும். படத்தின் கதாநாயகன் சௌ மோ வான் 1962வின் ஒரு வசந்த காலத்தில், ஹாங்காங்கின் மிக நெரிசலான, சிறியதொரு அடுக்குமாடி குடியிருப்பில், ஒரு அறையை வாடகைக்கு எடுக்க வருகிறான். சூயன் என்ற பெண்மணி அவன் கேட்கும் அறையை ஏற்கனவே வேறொருவருக்கு கொடுத்துவிட்டதாகக் கூறி அதற்கு பக்கத்தில் உள்ள அறையை வாடகைக்கு கொடுக்கிறாள்.
செள மே வான் திருமணம் ஆகியும் பேச்சுலர் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவரது மனைவி வேலை விசயமாக அடிக்கடி வெளியூர் சென்று பிஸியாக வேலை செய்துகொண்டிருக்கிறாள். இதனால், அவள் வீடு வருவதற்கே தினமும் இரவு வெகுநேரம் ஆகிவிடுகிறது. தனது மனைவியுடன் இருந்ததை விட தனிமையில் இருந்தது தான் அதிகம்.
வாடகை வீட்டிற்கு செல்லும் செள மே வானின் பக்கத்து அறையில் ஸோ லாய் ஸென் என்ற ஒரு பெண் குடிவந்திருப்பதைப் பார்க்கிறான் சௌ மோ வான். ஸோ லாய் ஸென் ஒரு அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறாள். ஸோ லாய் ஸென்னின் கணவனும் பிஸியாக, அடிக்கடி வெளிநாடு செல்பவனாக இருக்கிறான். இதனால், அவளும் தனிமையில் இருக்கிறாள்.
இந்த சூழலில் செள மே வான் ஒரு பக்கத்து உணவு விடுதிக்கு உணவு உண்ண செல்கையில் அடிக்கடி ஸோ லாய் ஸென்னை பார்க்கிறான். அவளும் அதே வழியில் அவனை கடந்து செல்கிறாள். மெளனமாக சிறிய தலையசைப்புடன் பேசாத உணர்வை பேசியது போல் கடத்தி செல்லும். இப்படியே நாட்கள் நகர்கின்றன. எதேச்சையாக ஒருநாள் இருவரின் துணைவர்களும் ஒரு ரகசிய உறவில் இருப்பதை தெரிந்துகொள்கின்றனர்.
இதை பேசத் தொடங்கியதும் தனிமையில் இருந்த செள மே வான், ஸோ லாய் ஸென்னும் நட்புடன் பேச பழக ஆரம்பிக்கின்றனர். நட்பாக இருந்தாலும், வெளியில் சொல்ல முடியாத தவிக்கின்ற காதலை இருவரும் ஒரு மெல்லிய கோட்டில் நகர்த்தி செல்கின்றனர். 1960களில் சமூகம் வகுத்து வைத்த கட்டுப்பாட்டை மீறி இருவரது உணர்வுகள் மெளனங்கள் காதலாய் வெடிக்கிறது.
இருவரும் காதல் என்று உணர்ந்த போதும் சொல்ல தயக்கம். இந்த சூழலில் சௌ மோ வானுக்கு சிங்கப்பூரில் ஒரு வேலை கிடைக்கிறது. அதற்குச் செல்ல முடிவு செய்யும் அவன், தன்னுடன் வந்துவிடுமாறு ஸோ லாய் ஸென்னிடம் கெஞ்சுகிறான். அவளால் வர முடியும், முடியாது என்று சொல்ல முடியாத நிலை. செள மே வான் அவளுக்காக வெகுநேரம் காத்திருக்கிறான். தனது வீட்டிலிருந்து ஓடி வரும் ஸோ லாய் ஸென் வருவதற்குள், அவன் கிளம்பிவிடுகிறான்.
ஒருநாள் சிங்கப்பூரில் இருக்கும் வீட்டில் யாரே வந்து சென்ற தடம் தெரிகிறது. சிகரெட்டில் லிப்ஸ்டிக் ஒட்டியிருப்பதை கண்டு பூரித்து போகும் செள மே வான், தொலைபேசியில் ஸோ லாய் ஸென்னிடம் பேச முயற்சிக்கிறான். மறுமுனையில் அழுத்தமான மௌனம். அவளது மெளனங்களை உடைத்து பார்க்க முயற்சித்தால் வலிகள் அதிகம் இருக்கும். அதைத்தான் முன்னரே சொன்னது, “காதலில்லை காமமில்லை இந்த உறவுக்கு பெயரில்லை”. தனிமையின் பாரமே ஒருவர் மீது ஒருவருக்கு காதல் அதிகரிக்க காரணமாக இருக்கிறது. வசனங்கள் குறைவு இசையால் மனதை வருடி செல்லும் இன் த மூட் பார் லவ்.