அழகான அம்சமான படம் சின்னத்தம்பி. இதை அந்தக் காலத்தில் தாய்மார்கள் உச்சி முகர்ந்து பாராட்டிய படம். சாயங்காலம் ஆனால் போதும். பூவும், பொட்டும் வச்சி சிங்காரிச்சி படம் பார்க்க கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வந்து குவிந்து விடுவார்கள். குழந்தைத்தனமான கள்ளம் கபடமற்ற பிரபுவின் நடிப்பு தான் படத்தையே தூக்கி நிறுத்துகிறது.
அவ்வளவு ரசனையையும் தன் அருமையான நடிப்பால் கவர்ந்து விடுகிறார் இளைய திலகம் பிரபு. இப்போது நினைத்தாலும் இந்தப் படத்தை ரீமேக் செய்தால் எந்த நடிகராலும் பிரபுவின் அளவுக்கு நடித்து விட முடியாது. அதே போல தான் படத்தில் அவருக்கு அம்மாவாக வரும் மனோரமாவும்.
என்ன ஒரு அருமையான நடிப்பு. கிளைமாக்ஸில் அவரது நடிப்பு கல் நெஞ்சையும் கரைய வைத்து கண்களில் கண்ணீர் வரவழைத்து விடும். ஆயிரம் திரைகண்ட ஆச்சி அல்லவா? அதே போல காமெடியில் பட்டையைக் கிளப்பியிருப்பார் கவுண்டமணி. காட்சிக்குக் காட்சி இவர் வரும்போதேல்லாம் நாம் விழுந்து விழுந்து சிரிக்கலாம். மாலைக் கண் நோய் என்ற ஒரு ஸ்கிரிப்டை வைத்துக் கொண்டு இவர் செய்யும் அலப்பறைகளுக்கு தியேட்டரே சிரிப்பலையால் அதிர்ந்து விடுகிறது.
தற்போது சந்தானம், யோகிபாபுவின் நடிப்பு எல்லாம் இவரது சாயல் கொஞ்சம் தெரிந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் போரடித்து விடுகிறது. இனி இப்படி யாரும் நடிக்க முடியாது என்ற பெருமையைத் தட்டிச் செல்கிறார் கவுண்டமணி.
அதுபோல குஷ்பு. இவரது நடிப்பு படத்தில் சிறப்பு. கன்னத்தில் குழிவிழும் சிறப்பு பிரபுவுக்கு மட்டும் தானா… எனக்கும் உண்டு என்று அந்த மென்மையான புன்சிரிப்பில் நம்மை லயிக்க வைத்து விடுகிறார்.
தாலி என்றால் என்னவென்றே தெரியாமல் ஒரு நடிகர் அதுவும் ஹீரோ எப்படி நடிக்க முடியும் என்பதை உடைத்தெறிந்து அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார் நம்ம சின்னத்தம்பி பிரபு.
பிரபுவின் நடிப்புக்கு ஒரு சூப்பரான சீன் இதுதான். குஷ்புவின் வீட்டில் அவர் பாடும் குயிலை புடிச்சி கூண்டில் அடைச்சிக் கூவச் சொல்லுறது உலகம் என்ற பாடல் தான். இதில் அவர் வெளிப்படுத்தும் எக்ஸ்பிரஷன். அதுதான் உணர்ச்சி கலந்த நடிப்பு இப்போது பார்த்தாலும் நம்மை மெய்மறக்கச் செய்யும். அவ்ளோ சூப்பராக இருக்கும்.
இந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்குக் காரணம் டைரக்டர் பி.வாசு. லாஜிக்கே இல்லாத கதைகளத்தைத் தந்து நம் உள்ளங்களை எல்லாம் கொள்ளை கொண்டு விட்டார். படத்தில் பாடல்கள் அத்தனையும் தேனாறாகப் பாய்ந்து நம் செவிகளைக் குளிரச் செய்கிறது. அந்தப் பெருமை நம் இசைஞானி இளையராஜாவையேச் சாரும்.
1992ல் வெளியான இந்தப் படத்தில் நடித்த எந்த ஒரு நடிகர்களையும் குறை சொல்ல முடியாது. அவரவர்களின் கதாபாத்திரங்களை உணர்ந்து செம்மையாக நடித்துள்ளனர். அதனால் தான் படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.
மொத்தத்தில் சொல்ல வேண்டும் என்றால் யாரும் இந்தப் படத்தை ரீமேக் மட்டும் செய்து விடாதீர்கள். அது தான் மிகவும் நல்லது.