உலகநாயகன் கமல்ஹாசன் எப்போதுமே வித்தியாசமான படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் அவர் எடுத்த திரைப்படம் தான் ‘ஆளவந்தான்’. ஆசியாவிலேயே முதல் முறையாக மோஷன் கிராபிக்ஸ் கேமராவை பயன்படுத்தி எடுக்கப்பட்ட படம் ‘ஆளவந்தான்’ என்பது குறிப்பிடத்தக்கது.
‘கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான், வெளியே மிருகம் உள்ளே கடவுள் விளங்க முடியா கவிதை நான்’ என கமல்ஹாசனின் கர்ஜிக்கும் குரலில் உருவானதுதான் ஆளவந்தான்.
சிவாஜி கணேசனுடன் ரஜினி, கமல் நடித்த படங்கள் இத்தனையா?
இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியானது. தமிழ்,ஹிந்தி என இரண்டு மொழிகளிலும் உருவான இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 25 கோடி. ஆனால் வசூல் செய்தது மிக மிக குறைவு என்பதால் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டம்.
கமல்ஹாசனை வைத்து ஒரு திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்த தயாரிப்பாளர் தாணு, கதை விவாதம் குறித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது பம்மல் கே சம்பந்தம் என்ற படத்தைத்தான் எடுப்பதாக இருந்தது. அதற்கான கதை டிஸ்கஷன் நடந்ததாகவும், படம் தொடங்கும் நேரத்தில் திடீரென அந்த படம் வேண்டாம், ‘ஆளவந்தான்’ என்று ஒரு கதை இருக்கிறது, அதை வைத்து எடுப்போம் என்று கமல்ஹாசன் சொன்னதாகவும் அதற்கு தாணு ஒப்பு கொண்டதாகவும் தெரிகிறது. இந்த படத்திற்கு கமல்ஹாசன்தான் திரைக்கதை எழுதினார்.
இதனையடுத்து இந்த படத்தை ஹிந்தியிலும் எடுக்க முடிவு செய்யப்பட்டது. அப்படி உருவானது தான் ‘ஆளவந்தான்’. குடும்பத்தில் நடக்கும் சின்ன சின்ன தவறுகள், அதன் விளைவாக ஏற்படும் சிக்கல்கள் குழந்தையை எப்படி எல்லாம் பாதிக்கும் என்ற ஒன்லைன் கதைதான் ‘ஆளவந்தான்’.
இந்த படத்தில் கமல் கமாண்டோ மற்றும் கொடூர வில்லன் என இரண்டு கேரக்டரில் நடித்திருப்பார். மனிஷா கொய்ராலா, ரவீனா டண்டன் ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்திருந்தனர். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு மகேஷ் மாதவன் இசையமைத்திருந்தார்.
20 வருடங்களுக்கும் மேல் மோதிய கமல் – ரஜினி படங்கள்.. மாறி மாறி கிடைத்த வெற்றி..!
முதல் முறையாக மோஷன் கிராபிக்ஸ் கேமராவை பயன்படுத்தியது மட்டுமின்றி லைவ் சவுண்ட் சிஸ்டம், மாறுபட்ட திரைக்கதை என இந்த படம் டெக்னிக்கலில் அசத்தியது. கிளைமாக்ஸில் இரண்டு கமல் சண்டை போடும் காட்சி கிராபிக்ஸ் தொழில்நுட்பத்துடன் படமாக்கப்பட்டது. ஆனாலும் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை என்பது தான் மிகப்பெரிய சோகம்.
இந்த நிலையில் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக கலைஞர் கருணாநிதியிடம் பட பூஜை அழைப்பிதழ் கொடுக்க தாணு சென்றிருந்தார். அப்போது அந்த அழைப்பிதழை பார்த்த கலைஞர் கருணாநிதி என்ன கதை என்று கேட்டாராம். அப்போது தாணு கதை சொல்ல, ‘இந்த படம் ஓடாது’ என்று கலைஞர் கருணாநிதி கூறினார். இதனால் தாணு அதிர்ச்சி அடைந்தார். ‘ஒரு ஹீரோ கெட்டவனாக, வில்லனாக நடித்தால் தமிழ் சினிமா ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நீரும் நெருப்பும் என்ற திரைப்படத்தில் எம்ஜிஆர் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்தார். அந்த படம் ஓடவில்லை’ என அதேபோல் பல உதாரணங்களை கலைஞர் கருணாநிதி கூறினார்.
அதே நேரத்தில், ‘நான் என்னுடைய கருத்தை சொல்லி விட்டேன், அதன் பிறகு உன் இஷ்டம், எனது வாழ்த்துகள்’ என்று கலைஞர் கருணாநிதி கூறியதாக பின்னாளில் ஒரு பேட்டியில் தாணு கூறியிருந்தார்.
ஒரே தீபாவளியில் வெளியான 4 கமல்ஹாசன் படங்கள்.. எந்த வருடம்? என்னென்ன படங்கள்?
பூஜை போடுவதற்கு முன்பே இந்த படம் ஓடாது என்று கருணாநிதி கணித்தது போலவே இந்த படம் சுத்தமாக ஓடவில்லை. ஆனால் அதே நேரத்தில் இந்த படம் தொழில்நுட்ப விஷயங்களுக்காக இன்றும் பாராட்டப்படும் படமாக இருக்கிறது.