பாடல்..
அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்
அருமருந்தை அகன்ஞாலத் தகத்துள் தோன்றி
வருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு
வான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும்
பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப்
பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும்
பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
விளக்கம்..
ஒப்பற்ற துணைவன், அடியவர்களின் துயரைப் போக்கும் அமுதம் போன்றவன். பரந்த இவ்வுலகில் பிறப்பெடுத்த பின்னர் உடன்தோன்றும் துணைவர், ஏனைய சுற்றத்தார், செல்வம் இவற்றிலுள்ள பாசத்தை நீத்து, பெரியபுலன்களின்மேல் செல்லும் மனத்தை அடக்கி, மகளிரோடும் படுக்கையில் நுகரும் சிற்றின்பப் பயனை அடியோடு நீக்கி, ஏனைய தெய்வங்களோடு பொதுவாக நினைப்பதனை விடுத்துத் தன்னையே விருப்புற்று நினைத்தலில் வல்ல அடியவர்களுக்கு எக்காலத்தும் உடனாய் நின்று உதவும் துணைவன் ஆகிய பெரும்பற்றப்புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
.