சன் டிவியில் தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி டி.ஆர்.பி இல் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் சீரியல் எதிர்நீச்சல். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கக் கூடிய ஒரு தொலைக்காட்சி தொடராக இந்த எதிர்நீச்சல் தொடர் இருந்து வருகிறது. தொலைக்காட்சி தொடர்களை அதிகம் பார்க்காதவர்கள் கூட இந்த எதிர்நீச்சல் தொடரின் கதைக்களம், காட்சி அமைப்பு, வசனம் போன்றவற்றால் விரும்பிப் பார்க்க தொடங்கியுள்ளார்கள். பல பிரபலங்களும் இந்த எதிர்நீச்சல் தொலைக்காட்சி தொடரை விரும்பி பார்ப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆதி குணசேகரன் என்னும் கதாபாத்திரம் தன்னுடைய ஆணாதிக்க மனப்பான்மையினாலும் பிற்போக்குத்தனமான சிந்தனைகளினாலும் தன் குடும்பத்து பெண்களை நடத்துகின்ற விதத்தை பற்றிய கதைக்களம் ஆகும். இந்தத் தொடரினை நடிகை தேவயானியை கதாநாயகியாக கொண்டு கோலங்கள் என்னும் மாபெரும் வெற்றி தொடரை எடுத்த இயக்குனர் திருச்செல்வம் அவர்கள் இயக்குகிறார். இந்த தொலைக்காட்சி தொடருக்கு சின்னத்திரை நடிகையாக இருந்த ஸ்ரீவித்யா அவர்கள் வசனங்களை எழுதுகிறார். இவரது வசனங்கள் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.
பெண் அடிமைத்தனம், பிற்போக்கான சிந்தனைகள், மூடநம்பிக்கைகள் மட்டும் இன்றி அதையும் தாண்டி சமூகத்திற்கு தேவையான பல நல்ல கருத்துக்களை எடுத்து உரைக்கும் தொடராக இந்த எதிர்நீச்சல் தொடர் அமைந்துள்ளது. கடந்த வாரத்தில் அரசு பள்ளியில் படிப்பது பற்றியும் தாய்மொழி வழிக் கல்வியில் படிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றியும் ஒரு சிறுமி உணர்த்துவது போல் எடுத்துள்ள காட்சிகள் பலரையும் பாராட்ட வைத்துள்ளது.
ஏற்கனவே இந்த தொலைக்காட்சி தொடர் ஒரே நேரத்தில் தமிழில் மட்டும் இன்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம், பெங்காலி மராத்தி என ஐந்து மொழிகளில் ஒளிபரப்பாகி சாதனை பெற்று இருந்தது. இப்பொழுது ரசிகர்களின் பேராதரவாலும் பல ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி வந்த இந்த எதிர்நீச்சல் தொலைக்காட்சி தொடரானது வாரத்தின் ஏழு நாட்களும் ஒளிபரப்பாக உள்ளது.
சின்னத்திரை வரலாற்றிலேயே இதுதான் முதன்முறையாக ஒரு சீரியல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஒளிபரப்பாக உள்ளது. இது தொடர்பாக வெளியான ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் இனி வாரத்தின் எல்லா நாட்களிலும் எதிர்நீச்சல் தொலைக்காட்சி தொடரை பார்க்கலாம் என்று மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள்.