அன்றைக்கு தேவையான காய்கறிகளை அன்றைக்கு வாங்கிக் கொள்ளும் வழக்கம் இப்போதெல்லாம் இல்லை. ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு தேவையான காய்கறிகளை நேரம் கிடைக்கும் பொழுது வாங்கி சேமித்து வைப்பது அனைவரின் வழக்கமாகிவிட்டது. என்னதான் இவற்றை குளிர்சாதன பெட்டியில் வைத்தாலும் சில நேரங்களில் உடனே கெட்டுப் போய் விடும் அல்லது சில காய்களில் பூஞ்சை வந்து விடும். இப்படி நடக்காமல் காய்கறிகளை நீண்ட நாட்களுக்கு புதிதாகவே வைத்திருக்க நாம் எப்படி சேமித்து வைக்கலாம் என்பதை பார்ப்போம்.
காய்கறிகளை எப்படி சேமித்து வைக்கலாம்:
1. ஈரத்துடன் காய்கறிகளை வைக்காதீர்கள்:
காய்கறிகளை சந்தையில் இருந்து வாங்கி வந்த பிறகு பலரும் அதை கழுவி சுத்தப்படுத்தி பின் குளிர்சாதன பெட்டியில் வைப்பர். முன்கூட்டியே கழுவி வைக்க வேண்டிய அவசியம் இல்லை எப்பொழுது பயன்படுகிறோமோ அவ்வப்போது காய்கறிகளை கழுவி சுத்தப்படுத்திக் கொள்ளலாம். இல்லை முன்கூட்டியே கழுவி வைக்க வேண்டும் என்று விரும்பினால் கழுவிய காய்கறிகளை நன்கு உலர்த்தி அதன் பின் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
2. நறுக்கிய காய்கறிகளை வைக்க வேண்டாம்:
காய்கறிகளை எப்பொழுதும் முழு காய்கறியாக குளிர்சாதன பெட்டியில் வையுங்கள். துண்டாக நறுக்கி குளிர்சாதன பெட்டியின் உள்ளே வைப்பது தவிர்க்கவும். கொத்தமல்லி போன்றவற்றின் தண்டு பகுதிகள் அல்லது வேர் பகுதிகள் போன்றவற்றை மட்டும் நீக்கி விட்டு வைக்கலாம்.
3. மொத்தமாக அனைத்து காய்கறிகளையும் ஒன்றாக போட வேண்டாம்:
அனைத்து காய்கறிகளையும் ஒன்றாக ஒரே இடத்தில் போட்டு வைக்காமல் காய்கறிகளை பிரித்து தனித்தனியாக பை அல்லது கொள்கலனில் வைத்து சேமித்து வைக்கவும். ஒவ்வொரு காய்கறிக்கும் ஒவ்வொரு விதமான வெப்பநிலை தேவைப்படும் அதற்கு தகுந்தார் போல் அடுக்கி வைக்கவும்.
4. என்னென்ன காய்கறிகள் உள்ளன என்பதை அவ்வபோது சோதித்தல்:
குளிர்சாதன பெட்டியில் என்ன காய்கறிகள் உள்ளன என்பதே சில நேரங்களில் பலருக்கு மறந்து விடும். அதனால் காய்கறியை நீண்ட நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியிலேயே வைத்தல் அல்லது சில காய்கறி இருப்பதையே மறந்து பயன்படுத்திட தவறி விடுதல் போன்றவற்றை தவிர்க்க காய்கறி வாங்கிய தேதியினை ஒரு லேபிளில் எழுதி ஒட்டி விடலாம். இது காய்கறியை அந்த குறிப்பிட்ட நாட்களுக்குள் பயன்படுத்திட உதவி புரியும்.
இவற்றிற்கும் மேலாக குளிர்சாதன பெட்டியை சுத்தமாய் வைத்தலும் வெப்பநிலையை சரியாக பராமரித்தலும் மிகவும் அவசியம்.
உங்க வீட்டு குளிர்சாதன பெட்டி துர்நாற்றம் அடிக்கிறதா? அப்போ இந்த 5 வழிமுறைகளை பின்பற்றி பாருங்க…!
உருளைக்கிழங்கு, வெங்காயம், மரவள்ளிக்கிழங்கு போன்றவற்றை குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. தக்காளியையும் அறை வெப்ப நிலையில் வைத்து பயன்படுத்துவது நல்லது. கூடுமானவரை பழங்களை மட்டும் குளிர்சாதன பெட்டியில் வைக்காமல் அப்போது வாங்கி உண்ணுங்கள்.