வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் பலர் வீடு, வேலை, குழந்தை என இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு தங்களுடைய உடல் நலத்திலும் சுய விருப்பு வெறுப்பிலும் கவனம் செலுத்த மறந்து விடுகிறார்கள்.
அதிலும் கூட்டுக் குடும்பங்களாக இருந்தால் குழந்தைகளை பராமரிக்க குறைந்தபட்சம் யாரேனும் ஒருவராவது இருப்பார் தற்போதுள்ள சூழலில் பெரும்பாலும் தனி குடும்பங்களாக இருப்பதால் அனைத்து பொறுப்புகளும் தாய்மார்களிடமே வந்து விடுகிறது. ஆய்வு ஒன்றின் படி 80% வேலைக்குச் செல்லும் பெண்களிற்கு கீழ்க்கண்ட நோய்களில் ஏதேனும் ஒன்று இருப்பதாக தெரியவந்துள்ளது.
காரணம் மோசமான உணவு பழக்க வழக்கம் அல்லது போதுமான அளவு உணவு உண்ணாதது, சரியான தூக்கம் மற்றும் ஓய்வு இல்லாமல் ஓடிக்கொண்டே இருப்பது, குழந்தை பராமரிப்பில் ஏற்படும் குழப்பங்கள் பதட்டங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் அவர்கள் உடல்நலன் வெகுவாக பாதிக்கப்படுகிறது.
வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் சந்திக்கும் 8 உடல் நல பிரச்சனைகள்:
1. மன அழுத்தம் மற்றும் பதட்டம்:
வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் கடிகாரத்தை விடவும் வேகமாக சுற்றிக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது. எனவே சோர்வாகவும் மிகுந்த களைப்புடனும் உணர்கிறார்கள். சில இளம் தாய்மார்கள் அவர்களின் கைக்குழந்தைகளுக்கு இரவு முழுவதும் பாலூட்ட வேண்டிய சூழ்நிலை இருப்பதால் தூக்கமும் வெகுவாக பாதிக்கப்படும். இப்படி ஓய்வே இன்றி இருப்பதால் அவர்களுக்கு மன அழுத்தமும் தேவையற்ற பதட்டமும் அதிகரிக்கும். இது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழி வகுக்கும்.
2. இதயநோய்கள்:
காலை நேர உணவினை தவிர்ப்பது, சரியான நேரத்திற்கு உணவினை எடுத்துக் கொள்ளாமல் கிடைக்கின்ற நேரத்தில் கிடைக்கும் உணவை உண்ணுதல், அதிகமாக துரித உணவுகளை உண்ணுவது, போன்ற பல்வேறு காரணங்களால் அவர்களுக்கு உடலில் அதிக அளவு கொழுப்பு மற்றும் ஹைப்பர் டென்ஷன் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது இது இதய நோய்களுக்கு அடித்தளம் இடுகிறது. வேலைக்குச் செல்லும் பல தாய்மார்கள் 35 வயதிலேயே இதய நோய்க்கு உள்ளாவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
3. கடுமையான முதுகு வலி:
போதுமான உடற்பயிற்சி இல்லாமல் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, தகுந்த கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளாதது, வீட்டிலும் சரியான ஓய்வு இல்லாமை போன்ற காரணங்களால் அவர்களுக்கு இள வயதிலேயே முதுகு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. வேலைக்குச் செல்லும் பல தாய்மார்கள் இந்த கடுமையான முதுகு வலியினால் அவதியுறுகிறார்கள்.
4. தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்:
பெண்களுக்கு கர்ப்ப காலத்திலும் பிரசவத்திற்கு பிறகும் உடலில் பல்வேறு ஹார்மோனல் மாற்றங்கள் நிகழும். தொடர் அழுத்தத்தால் ஹார்மோனல் மாற்றங்கள் அதிகரித்து மெட்டபாலிசத்தை குறைத்திட வாய்ப்பு உண்டு இதனால் பெண்களுக்கு மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் ஏற்படலாம்.
5. பால் கட்டுதல்:
இது பல இளம் தாய்மார்களுக்கு ஏற்படலாம். ஆறு மாதம் வரை குழந்தைக்கு பால் கொடுத்தல் அவசியம். வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தாய்ப்பாலினை பம்ப் மூலம் வெளியேற்றி ஸ்டோர் செய்து வைத்து குழந்தைக்கு கொடுக்கிறார்கள். அப்படி செய்யும் தாய்மார்கள் சரியான இடைவெளியில் பாலை வெளியேற்ற வேண்டும் இல்லையே இவ்வகையான பிரச்சனைகள் ஏற்படும்.
6. உடல் எடை அதிகரிப்பு:
வேலைக்குச் செல்லும் பல தாய்மார்கள் அலுவலகத்தில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதாலும், தவறான உணவுகளாலும் உடல் எடை அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
7. ஊட்டச்சத்து குறைபாடு :
வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் உடனடியாக செய்து உண்ணக்கூடிய உணவுகளையே பெரும்பாலும் தங்களுக்கு எடுத்துக் கொள்கிறார்கள். சரிவிகித உணவு உண்பதை மறந்து விடுகிறார்கள் இதனால் இரும்புச்சத்து விட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அவர்களுக்கு குறைபாடு ஏற்படுகிறது.
8. மன ஆரோக்கியம்:
தெரிந்தோ தெரியாமலோ பெண்களால் வீடு, வேலை, குழந்தை என அனைத்தையும் சமமாக பராமரிக்க முடியும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இவற்றை நிர்வகிக்கும் பெண்கள் தங்களுடைய உடல் நலனை மனநலனை நிர்வகிக்க தவறி விடுகிறார்கள். அமெரிக்கர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில் 9.8 மில்லியன் தாய்மார்கள் வேலைக்கு செல்லும் அலுவலகங்களில் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.
WHO பணிபுரியும் இடங்களில் மன அழுத்தம் வெற்றிகரமாக நிர்ணயிக்கப்படவில்லை என்று தெரிவிக்கிறது.
பலர் தலைவலி, முடி உதிர்வு, குறைந்த அளவிலான உற்சாகம் திடீரென அழுதல் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.
வேலைக்கு செல்லும் தாய்மார்கள் பலர் குழந்தைகளுடன் நல்ல நேரத்தை செலவிட முடியாமல் போதல் அல்லது குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நல குறைவு ஏற்படுதல் காரணமாக குற்ற உணர்ச்சிக்கு ஆளாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறாரகள். இதுவும் அவர்களது மன நலனை பாதிப்பதாக தெரிவிக்கிறார்கள். பலர் தங்களின் கோபங்களை அந்த குழந்தைகளின் மீதே காண்பிப்பதாகவும் கூறுகிறார்கள்.
வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள்:
நேரத்தை சரியாக திட்டமிட்டு கொள்ளுதல். நேரத்தை திட்டமிடும் பொழுது 15 முதல் 30 நிமிடங்கள் உடற்பயிற்சிக்கு என்று ஒதுக்கி விட வேண்டும். தினமும் காலை உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி செய்யும் பொழுது உடலை உற்சாகத்துடனும் போதுமான அளவு உடல் இயக்கத்துடனும் வைத்திருக்க முடியும் உடற்பயிற்சி உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரிக்க உதவி புரிகிறது.
உணவினை திட்டமிடும் பொழுது அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும் விதமாக சரிவிகித உணவாக இருக்கும் படி திட்டமிட்டுக் கொள்ளவும். உணவுக்கு பதிலாக பாக்கெட் களில் அடைத்த உணவு பொருட்களை எடுத்துக் கொள்வதை தவிர்த்து நட்ஸ், பழங்கள், பழச்சாறுகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளவும்.
நேரம் கிடைக்கும் பொழுது உடலுக்கு தேவையான அளவு ஓய்வினை எடுத்துக் கொள்ளுதல் மிகவும் அவசியம்.
வீட்டு வேலைகளில் மற்ற குடும்ப உறுப்பினர்களின் உதவியை நாடலாம். அனைவரையும் பங்கெடுத்துக் கொள்ள செய்வதன் மூலம் பேசிக்கொண்டே செய்ய அவர்களுடன் நேரம் செலவிட்ட திருப்தியும் வேலை செய்ததால் வழக்கமாய் உண்டாகும் களைப்பு இல்லாமல் இருப்பதையும் உணரலாம்.
வேலைக்கு செல்லும் தாயாக இருந்தாலும் சரி வீட்டில் இருந்து குழந்தைகளை பராமரிக்கும் தாயாக இருந்தாலும் சரி அனைத்து தாய்மார்களும் சிறந்தவர்கள் தான். வீண் குற்ற உணர்ச்சிக்கு மனதில் இடம் கொடுக்க வேண்டாம். ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றை பெற முடியும் என்று இல்லாமல் இரண்டிலும் சாதிக்க நினைக்கும் நீங்கள் சிறந்த தாய் எனவே குற்ற உணர்ச்சி குழப்பம் ஆகியவற்றிற்கு இடம் கொடுக்காதீர்கள்.