சாட்ஜிபிடி போன்ற ஏஐ தொழில்நுட்பம் தற்போது உலகம் முழுவதும் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் இந்த தொழில்நுட்பம் ஆரம்ப நிலையில் இருந்த போது இந்திய விவசாயி ஒருவர் இதனை பயன்படுத்தியதாக இந்தியா வந்துள்ள ஓபன்ஏஐ சி.இ.ஓ சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது இந்தியாவிற்கு வருகை தந்துள்ள சாம் ஆல்ட்மேன்இந்திய ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் சாட்ஜிபிடி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இந்தியா ஏற்றுக்கொண்டது தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் இந்திய விவசாயி ஒருவர் சாட்ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவை ஆரம்ப நிலையிலேயே பயன்படுத்திய தகவல் எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்றும் கூறினார்
விவசாயி ஒருவர் அரசு சேவையை பெற முடியவில்லை என்பதை அடுத்து அவர் சாட்ஜிபிடி துணையுடன் வாட்ஸ் அப் வழியே அந்த சேவையை பெற்றுள்ளார் என்றும் இப்படி எல்லாம் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளில் சாட்ஜிபிடி பயன்பாட்டை ஏற்றுக்கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும் சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசியபோது சாட் இபிடி உள்ள நன்மை மற்றும் தீமைகள் குறித்து ஆலோசித்தோம் என்றும் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இந்தியாவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை பார்க்கும்போது தனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்றும் இது எங்களுடைய சாட்ஜிபிடி மட்டும் இன்றி அனைத்து நிறுவனத்தின் ஏஐ பயன்பாட்டையும் வைத்து சொல்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக் கொண்டு தீய விஷயங்களை நாம் தவிர்த்தால் மிகப்பெரிய தொழில்நுட்ப புரட்சி ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார். சாட்ஜிபிடி மூலம் கதை எழுதுதல் கவிதை எழுதுதல் கட்டுரை எழுதுதல் உள்ளிட்ட பல விஷயங்கள் நடைபெறுவதால் வேலைவாய்ப்பு ஒரு புறம் குறைந்தாலும் தொழில் வளர்ச்சியில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.