தமிழக அரசு 2011 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக நியமனம் செய்வதற்கு இந்த ஆசிரியர் தகுதி தேர்வில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே நியமனம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்திருந்தது.
அதன் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டு தாள்களாக நடைபெற்றது முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியர்களாகவும் இரண்டாவது தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் ஆகவும் நியமிக்கப்படுவார்கள்.
இந்நிலையில் 2011 ஆம் ஆண்டுக்கு முன்பு அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டு பணியில் இருந்த ஆசிரியர்களுக்கு இந்த தகுதித் தேர்வு தேவையில்லை என்று ஆசிரியர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
வழக்கு நடைபெற்ற இத்தனை ஆண்டுகளில் அந்த ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2011 ஆம் ஆண்டுக்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு கட்டாயம் இல்லை என்று அறிவித்துள்ளது. ஆனால் பதவி உயர்வுக்கு டெட் தேர்வு அவசியம் தொடக்கப்பள்ளி ஆசிரியர், நடுநிலைப் பள்ளி ஆசிரியர், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர், தலைமை ஆசிரியர் போன்ற பதவி உயர்வுகளுக்கு இந்த தேர்வானது கட்டாயமாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.